இதற்கு முன்
1   2
          உண்மை. கருத்து. இரண்டும் ஒன்றா, வேறா?
நெருப்பு சுடும் என்பது உண்மையா, கருத்தா? என்னைக் கேட்டால் உண்மை என்பேன். விளக்கச் சொன்னால், "தொட்டிருக்கிறேன், சுட்டிருக்கிறது. அறிந்தேன், அதனால் உண்மை" என்பேன். எதிர்வீட்டில் இருக்கும் ஐந்து வயதுக் குழந்தையைக் கேட்டாலும் உண்மை என்பான், ஆனால் விளக்கச் சொன்னால் விழிப்பான். "எனக்குத் தெரியாது, எங்க அப்பாம்மா சொன்னாங்க" என்பான். இதில் யாருடையது கருத்து, யார் சொல்வது உண்மை? ஏன்?
இரண்டும் இரண்டும் நான்கு என்பது உண்மையா, கருத்தா? என்னைக் கேட்டால் உண்மை என்பேன். விளக்கச் சொன்னால் விழிப்பேன். காரணம், இது நான் உண்மையாக ஏற்றுக் கொண்ட கருத்து. எதிர்வீட்டுப் பிள்ளையும் சரி, தெருக்கோடி தாடிக்காரப் பேராசியரும் சரி.. பிறர் சொன்னதை அப்படியே நம்பி உண்மையாக ஏற்றுக் கொண்ட கருத்து. (அடிப்படையில் இது சில அனுமானங்கள், விதிகளுக்குட்பட்டக் கணித ஏரணம்2 வழியாக நிரூபிக்கபட்டக் கருத்தாகும்3.)
பரவலான கருத்து ஒன்று, ஏதோ ஒரு வகையில் அறிய முடிகிற காரணத்தால் உண்மையாக ஏற்கப்படுமெனில், பரவலாக ஏற்கப்படும் உண்மை ஒன்று, எந்த வகையிலும் அறிய முடியாத காரணத்தால் வெறும் கருத்தென்று ஒதுக்கப் பெறுமா? ஒதுக்க வேண்டிய கருத்தை, பரவல் காரணமாக, உண்மையென ஏற்றால் அது எந்த வகையில் நம்மைப் பாதிக்கிறது?
          அறிவுச்சுடர் ஒன்று ஒளிர்கிறது. அதிலேறி அவசரமாக ஒரு காலப்பயணம் செய்யலாம் வாருங்கள்.
நினைத்து முடிக்குமுன் மூவாயிரம் வருடங்கள் பின்வந்து விட்டோம். கிரேக்க அரசாங்க எல்லை. இடப்புறம் அடர்ந்த சோலை. வலப்புறம் கடற்கரை. காதலனைக் கண்ட காதலி போல் துள்ளி வரும் ஆரவாரக் கடலலை. சோலையின் மணங்கள். சற்றுத் தொலைவில் தொடுவானம். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். மயக்குவது ஒளியா இருளா? இங்கே, இந்த இடத்தில் நிற்போம். காரணம், இன்னும் ஒரு கணத்தில் வரப்போகும்... இதோ.. தொடுவானத்திலிருந்து தாவியிறங்கும் விமானத்தைப் பாருங்கள். விமானத்திலிருந்து இறங்கிவரும் அந்த முதியவரைப் பாருங்கள். அவரைச் சந்திக்கத்தானே இத்தனை காலதூரம் வந்தோம்.? சென்று அறிமுகம் செய்து கொள்வோம்.
"ஐயா.. நீங்கள் தானே பார்மினடிஸ்4?"
"ஆமாம்.. யார்.. யார் நீங்கள்? வினோதமாக இருக்கிறீர்களே?"
"ஐயா.. நாங்கள் எதிர்கால வாசிகள்.. உங்களைச் சந்திக்க வந்தோம்"
"எதிர்கால வாசிகள்... என்னை அறிவார்களா?"
"நீங்கள் உண்மையான அறிஞர் அல்லவா..?"
"உங்களுக்கு என்ன வேண்டும்?"
"ஐயா.. ஒரு அழகான விமானத்திலிருந்து இறங்கினீர்களே? எங்கே போய் வருகிறீர்கள்?"
"அதுவா..? இருளினின்று ஒளிக்கு ஒரு பயணம் சென்று வந்தேன்.. பெரிய கதை.."
"அதைக் கேட்கவே ஆர்வத்துடன்.. மூவாயிரம் ஆண்டுகள் காலப்பயணம் செய்து.. சரியான நேரத்திற்கு வந்திருக்கிறோம்.. தயவு செய்து உங்கள் பயணக் கதையைச் சொல்லுங்கள்"
"கேட்கும் ஆர்வம் இருந்தாலும், நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறதா?"
"மண்டையில் ஏறுறாப்புல சொல்றது..?"
"என்ன சொல்கிறார் உங்கள் நண்பர்?"
"திறமை உள்ளதா தெரியாது, ஆனால் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளும் விருப்பம் உள்ளது என்கிறார்"
"அப்படியா? முதலில் ஒரு சோதனைக் கேள்வி. கருத்துக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை உங்களில் யாராவது சொல்லுங்களேன்?"
"இன்னாபா.. தொரே..? கால சவாரினு கூட்டியாந்தே.. இப்பவே மண்டை காயுறாப்ல கேள்வி கேக்குதே பெரிசு... லெச்சர் குடுத்ததும் இன்னும் என்னா கேக்கப் போவுதோ? எதுக்குபா லொள்ளு, ஒடிறலாம்"
"என்ன சொல்கிறார் அவர்?"
"ஒன்றுமில்லை.. எங்களில் எவருக்குமே தெரியாது என்கிறார்.."
"அப்படியா! கருத்துக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை மூவாயிரம் ஆண்டுக்குப் பிந்தைய வருங்கால மக்களும் அறியாதிருப்பது என்னை வருந்த வைக்கிறது.. முன்னேற்றம், குருட்டு நொண்டிக் குதிரையில் பயணம் செய்கிறது போல. என் பயணக்கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள்..
..நேற்றோ முன்தினமோ.. என் மாணவர்களுடன் சித்தாந்தச் சிந்தை வயப்பட்டு இருக்கையில்... ஒரு மாணவன் என்னிடம் உண்மை என்ற தத்துவம் பற்றிக் கேட்டான். உண்மை என்றால் என்ன? உண்மை என்பது இருப்பதா? இல்லாததா? உருவாக்கப்படுவதா? உருவாக்க முடியாததா? மாணவர்கள் என்னை விட்டு விலகி நேரமாகியும் இப்படிப் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒன்று மட்டும் விளங்கியது. நல்ல மாணவர்களே ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள்..
..சிந்தனை வயப்பட்டிருந்த அந்த நேரத்தில்... நீங்கள் பார்த்தீர்களே அந்த விமானம்.. வந்திறங்கியது. அதில் இருந்த பெண் பர்சபனி தேவதை போலிருந்தாள். என்னை வணங்கி நலம் விசாரித்தாள். என் மாணவனால் எனக்குண்டான சிந்தனைச் சிக்கலைச் சொல்லிச் சிரித்தேன். அவளும் சிரித்தாள். பிறகு, 'இருளிலிருந்து ஒளிக்குப் பயணம் போக விருப்பமா' என்று கேட்டாள்..
..இருளினின்று ஒளிக்குப் பயணமா.. என்ன சொல்கிறாள் இவள் என்று ஒரு கணம் யோசித்தேன். சம்மதித்தேன். விமானத்தில் ஏறப்போன என்னை நிறுத்தி, 'ஒரு எச்சரிக்கை' என்றாள். 'நீங்கள் தனியாகவே இருளில் பயணம் செய்ய வேண்டும். வழியில் நிறைய விசித்திர உருவங்களைச் சந்திப்பீர்கள். சில உருவங்கள் உண்மையைச் சொல்லும். சில கருத்துக்களைச் சொல்லும். யார் உண்மையைச் சொல்கிறார்கள், யார் தங்களுக்குத் தோன்றியதை உண்மையென்றுச் சாதிக்கிறார்கள் என்பதை அறிந்து, உண்மைகளை மட்டும் சேகரிக்க வேண்டும். கருத்துக்களை நிராகரிக்க வேண்டும். உண்மையை விட்டு கருத்துக்களைச் சேர்த்தால் இந்த விமானம் நின்றுவிடும். உண்மையின் சக்தியால் மட்டுமே இந்த விமானம் இயங்குகிறது. உண்மைகளைச் சேகரிக்கத் தவறினால் நீங்கள் ஒளிக்குத் திரும்பவே முடியாது.. சம்மதமென்றால் சொல்லுங்கள்' என்றாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். எனக்கு எல்லாம் தெளிவானது.. ஆகா! இதல்லவோ நான் வேண்டுவது! உடனே அவளுக்கு நன்றி சொல்லி விமானத்தில் ஏறினேன்"
"ஐயா.. வழியில் நடந்ததைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்"
"மன்னியுங்கள் நண்பர்களே.. இத்தனை காலம் கடந்து வந்து ஒரு கிழவனின் பேச்சைக் கேட்டு அது உண்மையா கருத்தா என்று அறிய முடியாமல் குழம்புவதால் உங்களுக்கும் பயனில்லை, எனக்கும் பயனில்லை. ஒன்றை மட்டும் சொல்லி உங்களுக்கு விடை தருகிறேன். இருளினின்று ஒளிக்குப் பயணம் செய்ய முற்படுங்கள். என் பயணக் குறிப்புகளை நிதானமாக எழுதப் போகிறேன். எதிர்காலத்தில் படிப்பீர்கள் என நம்புகிறேன்... சென்று வாருங்கள்.. உங்கள் வருங்காலத்திலாவது உண்மை தேடப்பட்டு வெளிவரட்டும்".
    பார்மினடிஸின் பயணத்தை விவரிப்பதற்காக இந்தக் கதையைச் செருகவில்லை. எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன், உங்களைப் போல்.. என்னைப் போல்.. ஒரு மனிதன்.. கருத்துக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முனைந்தான். தன் அறிவை நமக்குப் பாடமாகத் தந்தான். உண்மையும் கருத்தும் ஒன்றென எண்ணி நாம் இன்றைக்கும் குழம்பி நிற்கிறோம்.
          'கட்டற்ற எதிர்மறை'5 என்ற ஏரணச் சித்தாந்தம் ஒன்று உண்டு.
கட்டற்ற எதிர்மறை என்பது, எங்கேயும் எதிலும் எப்போதும் இல்லாத ஒன்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. 'இங்கே-இதில்-இக்காலத்தில் என்றக் கட்டுக்குள் கடவுளை அளவறுக்க முடியாது' என ஆத்திகர்கள் தங்கள் வசதிக்கேற்ப, நாத்திகத்தின் எதிர்வாதமாக, அடிக்கடி பயன்படுத்துவதைக் கவனிக்கலாம். அதாவது, எல்லா இடங்களிலும் காலங்களிலும் தேடிப் பார்த்துக் கடவுள் இல்லை என்று எவராலும் நிரூபிக்க முடியாது (எனவே கடவுள் இருக்கிறார்) என்பது அவர்களின் வசதியான விசித்திரமான QED. உதாரணமாக, 'அங்கிங்கிலாதபடி எங்கும் நிறைந்த' என்பது கட்டற்ற எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட வாதம். 'இல்லை' என்று தீர்மானமாகச் சொல்ல முடியாததால், 'உண்டு' என்ற சந்தேகத்திற்கிடமான நிரூபணத்தில் குளிர்காயும் கருத்து.
கட்டற்ற எதிர்மறை என்பதே ஒரு கட்டற்ற எதிர்மறையாகும். கட்டற்ற எதிர்மறைகளுக்கு அளவரையோ நிரூபணமோ இல்லை என்ற வாதம் ஏற்புடையதென்றால், கட்டற்ற எதிர்மறைத் தத்துவத்தை எவராலும் அளவறுக்கவோ நிரூபிக்கவோ இயலாது என்பதையும் எவராலும் நிரூபிக்க முடியாது என்றாகிறது.. அப்படி எவராலும் நிரூபிக்க முடியாது என்பதையும் எவராலும் நிரூபிக்க முடியாது என்றால், அதுவே கட்டற்ற எதிர்மறையின் நிரூபணமாகிறது. சுற்றி வளைத்து கடவுள் இல்லை என்பதன் நிரூபணமாகி விடுகிறது - ஏரண விதிகளுக்குட்பட்ட நிரூபணம்!
இன்னொரு விதமாகச் சொல்வதென்றால், சரியானக் குழப்படி சாம்பார். இப்படிப்பட்ட விசுவாதங்களும் வெங்காயச் சித்தாந்தமும் விரிசலிடும் என்ற காரணத்தால், பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம் பிறவி மோட்சம் போன்ற இன்னும் பல கட்டற்ற எதிர்மறைகளை அவிழ்த்து விடுகிறது ஆத்திகம்.
கறுப்புச்சட்டை நாத்திகம் தடுக்கி விழுந்த இடங்களில் இது ஒன்று என்று நினைக்கிறேன். 'உண்டு' என்பதன் தடயங்களை அழித்தால் 'இல்லை' என்பதை நிரூபிக்க இயலும் என்ற தவறானக் கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு, உண்மையைத் தேடிச் சொல்ல மறந்துவிட்டது. ஆத்திகத்தின் வீம்புச் சீண்டலைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டது தவறு. இன்னமும் அதே பாதையில் செல்வது முட்டாள்தனமாகத் தோன்றுகிறது.
கடவுள் இல்லையென்பதை எடுத்துச் சொல்ல, ஆத்திகத் தடயங்களை அழிக்க வேண்டியதில்லை. கடவுள் என்பதே நிலையில்லாத தத்துவம் என்பதை எடுத்துச் சொன்னால் போதும்.
திரும்பத் திரும்பச் சொல்வதால், பல விதங்களிலும் வழிகளிலும் சொல்வதால், பொய்யையும் நம்பச் செய்யலாம் என்பதை அறிவோம். லேகிய விளம்பரங்களிலிருந்து தேர்தல்கள் வரை இதை அறிந்திருக்கிறோம்.
விளம்பரம் என்ற பெயரில் உணவு, உடை, வாழ்வுமுறை பற்றிய கார்பொரெட் பொய்களைத் திணிப்பது பற்றியும், பாமரர்களும் படித்தவர்களும் கூட விளம்பரங்களுக்கு அடிமையாவது பற்றியும் புலம்புகிறோம், வருந்துகிறோம். ஏன் ஏற்க மாட்டோம்? ஏன் போதை வசப்பட்ட அடிமைகளாக இயங்க மாட்டோம்? விளம்பரத்துக்கு மதிமயங்குவது நம் மரபணுவில் புதைந்திருக்கிறதே?
சிந்தித்துப் பார்த்தால் கடவுள் என்ற பொய்யும் நூற்றாண்டுகளாகத் திணிக்கப்பட்டு வருகிறது - அதற்கான விளம்பரங்களைத் தொன்று தொட்டு, பல வடிவங்களில் வகைகளில், நம் மனதிலும் அறிவிலும் நாம் ஏற்றே வந்திருக்கிறோம். கடவுள் தத்துவத்தால் பலனில்லை என்பதையும் இப்படி தொய்வில்லாத அறிவைத் தூண்டும் விளம்பரங்கள் வழியாக எடுத்துச் சொல்ல வேண்டும். தடயங்களை அழிப்பதினால் ஒரு மாறுதலும் நிகழாது.
மாறாக, உண்மை பொய் கருத்து என்பதெல்லாம் அவரவர் தேடியறிய வகை செய்ய வேண்டும். அழிவு ஆத்திரம், வெறுப்பு, வன்முறை, அச்சுறுத்தல், தாக்குதல் போன்ற முறைகளை அரசியலுக்கும் ஆத்திகத்துமே விட்டு, அறிவைத் தூண்டும் வகைகளில் நாத்திகத்தை வளர்க்க வேண்டும். நாத்திகத்தின் அடிப்படையே அறிவு தானே? ஆத்திக நம்பிக்கைகளை வளர்க்கவும் நினைவூட்டவும் கோவில்கள் பள்ளிகள் பண்டிகைகள் புத்தகங்கள் இருப்பது போல் நாத்திகத்தை வளர்க்க வழிகள் செய்ய வேண்டும். புராணம் மற்றும் புராணம் தழுவிய ஆத்திகச் சிந்தனைகள் இடம்பெறுவது போலவே, பள்ளிப் பாடங்களில் நாத்திகச் சிந்தனைக்கான பாடல்களும் கட்டுரைகளும் கதைகளும் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆத்திகத்துக்கு இணையாக நாத்திகமும் பரவ, சட்டரீதியாக பாதையும் பாதுகாப்பும் பெற்றுத்தர வழி செய்ய வேண்டும்.
          ஒரு புதிர். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்று அறிய ஆசை. தவறாக எண்ண வேண்டாம்.
பேப்பர் பென்சில் கேல்குலேடர் ஆராய்ச்சி என்று இறங்காமல், இந்தக் கேள்விக்கு மனதில் தோன்றிய பதிலை, சட்டென்று சொல்லுங்கள்:
      ஒரு பென்சிலும் வெற்றுத்தாளும் சேர்த்து ஒரு ரூபாய் பத்து காசுக்கு விற்கிறது. தாளை விட பென்சில் விலை ஒரு ரூபாய் அதிகம். எனில், பென்சில், தாள் இரண்டின் தனித்தனி விலை என்ன?
உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழக ஆய்வொன்றில்6 முன்னூறு பேரிடம் மேற்சொன்னக் கேள்வியைக் கேட்டார்கள். ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானோரே சரியான விடையைச் சொன்னார்கள். ஏனையோர் பென்சில் ஒரு ரூபாய், பேப்பர் பத்து காசு என்றத் தவறான விடையையே சொன்னார்கள்.
கேள்வியைக் கேட்டவுடன் சட்டென்று பதிலைச் சொல்ல வேண்டியிருந்ததால், பங்கு கொண்ட அனைவரின் விடைகளிலும் ஒருவித உள்ளறிவு கலந்தேயிருக்கும். விடை தவறா சரியா என்பதில் அக்கறையில்லை. ஆனால் தவறான விடையைச் சொன்னவருள் தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் ஆத்திகர்கள் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது. திடுக்கிட வைக்கும் தொகையுவமம்.
ஆத்திகத்தின் குருட்டு நம்பிக்கைகளும் கண்மூடித்தனங்களும் மனித சமூகத்தின் மிகச் சாதாரண இயக்க நிலைகளைக் கூட மழுங்கச் செய்யும் அளவுக்குப் பரவியிருக்கின்றன என்பது... எத்தனை கொடுமை!
2ஏரணம்:காரண-விளைவு தழுவிய சீரான விளக்கம், தர்க்கமுறை, logic
3ஜொசப்பெயின் (guiseppe peano) இயல்பெண் விதிகளை ஆதாரமாகக் கொண்டு பல வல்லுனர்கள் 2+2=4 என நிரூபித்திருக்கிறார்கள் :-). கைவசம் பொழுதிருந்தால் அவசியம் படித்துத் தெளியலாம் அல்லது குழம்பலாம். (2+2=5 என்றும் நிரூபிக்க முடியும், வேண்டாமே!)
42500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் பார்மனிடிஸ் (parminedes) எழுதியப் பயணக்குறிப்பில் ஏறத்தாழ 80% அழிந்து விட்டது. எஞ்சியவற்றுள் சில விவரங்கள் லேசாக இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக, Stanford Encyclopaedia of Philosophyல் எனக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார்கள். சுவைக்காகக் கதையில் கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்
5ஜானதன் ஷிக் எழுதிய 'unrestricted negatives' பற்றிய தர்க்கம்
6ஆய்வாளர் அமிதய் ஷென்கவ் தனது ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வொன்றின் விளக்கவுரையில் குறிப்பிட்டது.
► தொடர்க          
இதற்கு முன்1   2
//பரவலாக ஏற்கப்படும் உண்மை ஒன்று, எந்த வகையிலும் அறிய முடியாத காரணத்தால் வெறும் கருத்தென்று ஒதுக்கப் பெறுமா? //
பதிலளிநீக்கு'எந்த வகையிலும் அறிய முடியாத காரணத்தால்' என்று எப்படி சொல்ல முடியும்? அறிந்ததாக ஒருவர் உணர்ந்து அவரால் அதை விளக்க முடியவில்லை என்றால், அது இல்லை என்று ஆகி விடுமா?
வாழ்கை பயணம் இருளில் இருந்து ஒளியை நோக்கி செல்ல வேண்டும் என்றும், பயணத்தில் வழியில் வருவதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்பதையும் அழகாக சொல்கிறது கதை.
//கட்டற்ற எதிர்மறை என்பதே ஒரு கட்டற்ற எதிர்மறையாகும்.//
இதற்கான விளக்கம் கிளாஸ். :)
அப்போ, ஏரணம் விதிப்படி ரெண்டும் ரெண்டும் நாலு என்பது எப்படி உண்மையோ அப்படியே கடவுள் இல்லை என்பது உண்மை. :)
அருமையாக தொடர்கிறது பதிவு. இருளில் இருந்து ஒளிக்கு தனியாக பயணம். இந்த தனிமை பயணத்தில் ஒவ்வொருவரும் தாம் வெளிச்சத்தை நோக்கிதான் பயணம் செய்வதாக அவர்களே உணர்ந்து நிறைவையும் கண்டால் இதில் யார் கருத்து உண்மை!!!
கணக்குக்கு அநேகம் பேர் சொன்ன பதிலைதான் நானும் சொன்னேன். சட்டுன்னு சொன்னதாலதான் இப்படின்னு
நான் சொல்றதை தயவு பண்ணி நம்பி நீங்களும் அப்படியே எடுத்துக்கங்க. ஹிஹிஹிஹி.....
கொடி படங்களை இப்போ காணுமே?
சில திருத்தங்கள் தேவைப்படுவதால் முகப்புக் கொடியைத் தற்காலிகமாக நீக்கிவிட்டேன்.
பதிலளிநீக்கு//..அவர்களே உணர்ந்து நிறைவையும் கண்டால் இதில் யார் கருத்து உண்மை!!!
நன்றாகச் சொன்னீர்கள். நிறைவு என்பது அவரவருக்கு உண்டாகும் தனிப்பட்ட உணர்வு என்பதால் இதை விவாதிக்க இயலாது. தனக்கேற்பட்ட நிறைவு தன் சந்ததிக்கும் சுற்றத்துக்கும் ஏற்படும் என்ற நினைப்போடு செயலில் ஈடுபடுகையில் இது கண்மூடித்தனமாகிறது என்று நினைக்கிறேன். தனக்கே ஒரு சூழலில் நிறைவு உண்டானால் இன்னொரு சூழலில் அதே நிறைவைத் தரும் என்றும் கண்மூடித்தனமாக ஈடுபடவைக்கிறது.
கொஞ்சம் சிந்தித்தால் உண்மை பொய் இரண்டுக்கும் கருத்தே அடிவலு என்பது புரிந்துவிடும்.
கருத்துக்கு நன்றி மீனாக்ஷி.
உண்மைகளைச் சேகரிக்கத் தவறினால் நீங்கள் ஒளிக்குத் திரும்பவே முடியாது..
பதிலளிநீக்குஇருளிலிருந்து ஒளிக்குப் பயணம்
அசத்தோமா சத் கமய , (From untruth to tuth / from illusion to truth)
தமசோமா ஜ்யோதிர்கமய ( From darkness to light )”"
போன்றவை குறிக்கோளை உணர்த்தும், மக்களின் அறிவைத் தூண்டும் வாக்கியயங்கள், அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியில் நாம் செல்ல வேண்டும்,
வெறுமனே அவற்றை உச்சரித்தால் போதாது என்பதை அதிரடியாக தெளிவு படுத்தி இருக்கிறார் சங்கராச்சாரியார்.
வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பு. தடுமாறாமல் எழுதுங்கள்.
பதிலளிநீக்குஇருளில் இருந்து ஒளிக்குப் பயணம். பயணத்தின் விதிமுறைகள். சிந்திக்க தூண்டுகின்றன.
பதிலளிநீக்குகலக்கல் பின்னூட்டம் ராஜராஜேஸ்வரி! :))))
பதிலளிநீக்குகணக்குக்கு விடையை நானும் தப்பாய்த் தான் நினைச்சேன். :))) யோசிக்க நேரம் இல்லையே! (நொ.சா. தான், என்ன செய்யலாம்?) :))))))