2013-09-01

லர் ட்டை: 6அடிமைத்தனம் என்பது செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? குணமா?
போதைகளை நாடுவதைப் போலவே கடவுள் நம்பிக்கையும் ஒரு வகை அடிமைத்தன வெளிப்பாடா?

இதற்கு முன்
1   2   3   4   5


    'இளமையில் சுதந்திரம்' என்ற அமைப்பின் சார்பில் என்னை உள்ளூர் உயர்நிலைப்பள்ளியின் கோடை விழாவில் பேச அழைத்திருந்தார்கள். பெரும்பாலும் பத்து-பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நிறைந்த அரங்கு. சற்று கனமான கருத்துடன் தீட்டப்பட்டிருந்த என் உரையை முறையாகத் தொடங்குமுன் மாணவர்களைச் சற்றே ஈர்க்கலாம் என்று எண்ணி ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்தேன்: "அடிமை என்கிறோமே.. அப்படியென்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?"

முன் வரிசையில் ஒருவரையொருவர் பார்த்தார்கள். என் கேள்விக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை. கேள்வியை சற்று விளக்கி மீண்டும் அவர்கள் முன்வைத்தேன். "கறுப்பர்கள் வெள்ளையருக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்று படிக்கிறோம். லின்சி லோகன் போதைப்பொருளுக்கு அடிமையானார் என்கிறோம். நம் நண்பர்கள் மற்றும் சுற்று வட்டத்தினர் சிகரெட் மது போன்ற பழக்கங்களுக்கு அடிமைகள் என்கிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? தெரிந்தோ விரும்பியோ தானே சிகரெட் பிடிக்கிறார்கள்? உடல் நலத்தைக் கெடுக்கும் என்று தெரிந்து தானே போதை மருந்தை நாடுகிறார்கள்? எனில் அடிமை என்றால் என்ன? அடிமைத்தனம் என்பது என்ன? செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? அல்லது குணமா? எங்கிருந்து வருகிறது? நாம் ஒருவருக்கோ ஒரு பழக்கத்துக்கோ அடிமையாக இருக்கிறோம் என்பதை எப்படி உணர்வது? "நீ என் அடிமை" என்று சொன்னால் மட்டுமே அறியப்படுகிற உண்மையா?".

அரங்கில் சில கைகள் மெள்ள உயரத் தொடங்கின. எனக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. "சொல்லுங்கள்" என்றேன்.

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

அனைவருக்கும் நன்றி சொல்லி என் உரையைத் தொடங்கினேன். அன்றைய பேச்சு வெற்றிகரமாக முடிந்தது என்றே சொல்ல வேண்டும். இருபது நிமிடங்கள் கொடுத்திருந்தார்கள். 'சுதந்திரமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசியம்' என்ற பரந்த தலைப்பென்பதால் நிறைய பேச முடிந்தது. என்னுடைய பேச்சின் அடித்தளம், 'பிறர் சொற்படி கேட்டுச் சீரழிகிறோம், நம் எண்ணப்படி இயங்காமல் வாழ்வில் தோல்வியடைகிறோம், நம் முன்னோர்கள் உற்றார் நண்பர் சுற்றங்களின் பழக்கம் என்பதால் கண்ணை மூடி நாமும் பின்பற்றிப் பின்தங்குகிறோம்' என்ற கருத்துக்களில் அமைக்கப்பட்டிருந்ததால், என் நாத்திகச் சிந்தனைகளை சற்றுச் சுலபமாக அவர்கள் முன் வைக்க முடிந்தது. நான் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது மிகவும் நிறைவாக இருந்தது. ஆத்திக ஆதிக்கமும் வெறியும் மிகுந்த அமெரிக்க நகரமொன்றில் அறிவை நாடும் இளைய சமுதாயத்துடன் உரையாடிய அனுபவத்தை நான் மறக்கப் போவதில்லை.

உலகெங்கும் இத்தகைய அமைப்புகள் வேண்டும். உயர் நிலைப்பள்ளி மாணவர்களிடம் சுதந்திரச் சிந்தனைகளின் அவசியத்தைக் கொண்டு செல்ல வேண்டும். சுதந்திரச் சிந்தனைகளினால் சுய முன்னேற்றம் உண்டாவதை எடுத்துச் சொல்ல வேண்டும். 'அடுத்தவரை அவமானபடுத்துவதல்ல சுதந்திரச் சிந்தனை, தன்னையும் தன் வருங்காலத்தையும் தெளிவான பாதையில் கொண்டு செல்ல உதவுவதே சுதந்திரச் சிந்தனை' என்பதை அறியச் செய்ய வேண்டும். கண்மூடித்தனங்களின் ஆணி வேர்களை அறுத்தெறிய, சுதந்திரச் சிந்தனைகள் அவசியம் தேவை.

    அடிமை என்பவர் யார்? அடிமைத்தனம் என்றால் என்ன? அடிமையாக இருக்கிறோம் என்று அறியாமலே அடிமையாக இருக்க முடியுமா? முடியுமென்றால் அது எப்பேற்பட்ட கொடுமை! சுதந்திரம் என்பது உள்நோக்கு என்றாகும் பொழுது அதைக் கட்டுப்படுத்தி வைப்பதனால் எத்தகைய கொடுமைகளை நமக்கு நாமே இழைத்துக் கொள்கிறோம்!

அடிமைத்தனம் ஒரு குணம், ஒரு உணர்வு. அதற்கு மேல் அது நம் ரத்தத்தில் ஊறிய ஒரு குறி. ஒரு சுவடு. நம் உடலின் இயக்கங்களை நிர்ணயிக்கும் பலவகைக் குறிகளில் ஒன்றாகக் கலந்து போனது.

பிறக்கும் பொழுது யாரும் அடிமை உணர்வோடு பிறப்பதில்லை. பிறகு அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது? தூண்டுதல் யாது? அடிமைத்தனம் நம் டிஎன்ஏவில் கலந்துவிட்ட ஒரு குறித்துகளாகும். அடிமைத்தனத்தின் ரேகைகள் நம் உடற்கூறில் பதிந்திருக்கிறது..

நம் இயக்கங்களின் ஆதாரங்களைப் பற்றிய ஆய்வான phylogenetic reconstruction1, அதாவது, உலக மரபினர் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆய்வின் வழியே நிறைய அறிய முடிகிறது. அவற்றின் பலனாக பழங்குடி மரபுகளிலிருந்து இன்று வரையிலான உலக மாந்தரின் பழக்க வழக்கங்கள் உறவுமுறைகள் குணங்கள் பண்புகள் பற்றி எத்தனையோ அறிந்து கொண்டிருக்கிறோம், தொடர்ந்து அறிந்து வருகிறோம்.. இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றான 'விவரிக்க முடியாத நிகழ்வுகளையும் உருவங்களையும் அடிப்படையாக வைத்த நம்பிக்கைகள் பல தலைமுறைகளாக - நூற்றாண்டுகள் பரந்த பல தலைமுறைகளாக - தொடர்ந்து வருகின்றன' என்பது, சிந்திக்க வைக்கிறது.

மனித வளர்ச்சி மற்றும் உடற்கூறு பற்றி டிஎன்ஏ ஆய்வின் வழியே நிறைய அறிந்து வருகிறோம். உணர்வுகள் பற்றி? உளவியல் பற்றி? மனிதம் சில உணர்வுகளையோ, சிந்தனை ஒற்றுமைகளையோ, பரம்பரையாகப் பெறக் காரணங்கள் யாவை? இங்கே தான் தொன்மரபியல் ஆய்வு உதவுகிறது. mtDNA ஆய்வு முறைகள் உதவி புரிகின்றன. உதாரணமாக மனித உறவுமுறைகள், உணவு வழக்கங்கள், பாலுணர்வு, தாய்-தந்தை-சுற்றம் குறித்த உறவுமுறைகள்.. ஏன், பலவகை மரணச் சடங்கின் உந்துதல்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது..

அது போலவே அடிமைத்தனம் எனும் உணர்வும் நம்முள் கலந்திருப்பதை அறிய முடிகிறது. தன்னையறிந்துச் செயல்படும் முறை இன்று நம்முள் குறைந்த அளவிலே ஏன் காணப்படுகிறது? தனக்குத் தேவையான நம்பிக்கை உற்சாகம் சக்தியைப் பெற நம்மில் பலர் புறச்சக்தியைச் சார்ந்திருப்பதை விரும்புகிறோம்.. அது இன்னொரு மனிதரோ மரமோ மந்திரமோ.. நம்மில் பலர் அச்சார்பை வெளிப்படுத்துவது தெரியாமலே வெளிப்படுத்தி வருகிறோம் என்பது வருந்தத்தக்க உண்மை.

அடிமைத்தன உணர்வை அறிய, அந்த உணர்வின் வெளிப்பாடுகளை அறிய வேண்டும்.

அடிமைத்தனம் என்பது ஒரு அதிகார உருவைக் கண்டதும் அல்லது மனதால் எண்ணியதும், தன்னிச்சையாக நம் உடலில் தோன்றும் இயக்க உணர்வு. வடிவத்திலோ எண்ணத்திலோ எதிர்பட்ட அதிகார உருவை எந்த வகையிலாவது திருப்திப்படுத்தி, அதனால் பயன்பெற எண்ணும் கீழ்த்தட்டு உணர்வே அடிமைத்தனமாகும். அடிமைத்தனம் இயல்பாக வருகிறது என்பதே அபாயகரமான, எச்சரிக்க வேண்டிய, வருந்தத்தக்க உண்மை. அதிகார உருவைக் கண்டதும் நம் மூளை உடனடியாகச் செயலில் இறங்கி, பணிவுச் செய்திகளை உடலெங்கும் பரப்புகிறது. அதிகார உருவம் எந்த வடிவிலும் வரலாம். அடிமையுணர்வு எந்த வகையிலும் தோன்றலாம். ஒரு மிருகத்தைக் கண்டு அஞ்சுவதும் ஒரு வகையில் அதிகார உருவின் பாதிப்பே. ஒரு மனிதரைக் கண்டோ அல்லது ஒரு கல்லைக் கண்டோ அஞ்சுவதும் அந்த பாதிப்பின் மிகக் கொடிய வெளிப்பாடு.

பெற்றோர்களும் சமூகப் பெரியவர்கள் பலரும் இளம் சமுதாயத்தில் அடிமைத்தனத்தைத் தூண்டி வளர்க்கிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை. இந்த உணர்வு எத்தனையோ விதங்களில் தூண்டிவிடப்படுகின்றன. இன்ன உடை, சாப்பாடு என்பதில் தொடங்கி இன்ன படிப்பு இன்ன வேலை இத்தகைய திருமணம் என்று தொடர்கிறது இந்த போதனைகள். அதில் முக்கியமான தூண்டுதல்கள், கடவுள் மதம் இனம் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளே. அப்பாவி உள்ளங்களில், கள்ளமில்லா உள்ளங்களில், கல்லையும் மண்ணையும் போட்டுக் குழப்பியெடுக்கும் கொடுமைகளாகும்.

முன்னூறு ஆண்டுகளுக்கும் குறைவாக நம் மீதி ஆட்சி செலுத்திய வெள்ளையர்களைக் கண்டால், சமகால இந்தியர்கள் உள்பட, நம் மனதில் தோன்றுவது, முதலில் தோன்றுவது, தாழ்வு மனப்பான்மையினால் உந்தப்பட்டப் பணியுமுணர்வாகும். இன்றைக்கும் உலகக் கறுப்பரினத்தில் வெள்ளையர்களைக் கண்டால் தோன்றுவது அச்சங்கலந்த பணிவே. இந்த உண்மையை மிகச் சுலபமாக நிரூபிக்க இயலும்.

கடவுள் நம்பிக்கை அடிமைத்தன வெளிப்பாடா?. நிச்சயமாக.

கண்ணில் புலப்பட்ட, பழகிய, நம்மைப் போன்ற, நிறம் மட்டும் வேறான ஆதிக்க மனிதர்களைத் தழுவிய முன்னூறு ஆண்டுகளின் எண்ணங்களே அடிமைத்தனத்தை நம் மரபணுக்களில் பல தலைமுறைகளுக்கு நுழைக்கும் என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக - அதுவும் மகோன்னதம், சொர்க்க நரக பிறவி மரணங்களை நிர்ணயிக்கக்கூடிய அளப்பரிய, விளக்கமுடியாதது என்று சொல்லப்பட்டு வருகிற - நிரூபிக்க இயலாத சக்திக்குப் பணிந்து பரம்பரை பரம்பரையாய் தலைமுறை தலைமுறையாய் விரவி வந்திருக்கும் பழக்கங்களை, அச்சங்களை, நம்பிக்கைகளை உடனடியாக நம் சிந்தனைகளிலிருந்து, உணர்வுகளிலிருந்து, மரபணுக்களிலிருந்து நீக்க முடியுமா? எப்படி நீக்குவது?


1கேசில் மற்றும் ஹார்பர்க் எழுதிய மனிதவியல் சார்ந்த மூலக்கூறு, மரபு குறித்த ஆய்வுத்தாள், இன்டியேனா பல்கலைக்கழகம்► தொடர்க          

இதற்கு முன்
1   2   3   4   5

4 கருத்துகள்:

 1. பெயரில்லாசெப்டம்பர் 01, 2013

  Please provide the links to the references in the footnotes, if possible. Thanks.

  பதிலளிநீக்கு
 2. /
  அடிமைத்தனம் என்பது செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? குணமா?
  போதைகளை நாடுவதைப் போலவே கடவுள் நம்பிக்கையும் ஒரு வகை அடிமைத்தன வெளிப்பாடா?/ கேள்விகள்...கேள்விகள்...பள்ளி மானவரிடையே கேட்ட கேள்விக்கு பதில்கள் பதிவுக்குப் பலம் சேர்க்கிறது.இந்த முறையான வழிமுறைகளுக்குப் பதில்களில் கடவுள் நம்பிக்கையும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று வந்திருக்கிறதா.?

  பதிலளிநீக்கு
 3. பரம்பரை பரம்பரையாய் தலைமுறை தலைமுறையாய் விரவி வந்திருக்கும் பழக்கங்களை, அச்சங்களை, நம்பிக்கைகளை உடனடியாக நம் சிந்தனைகளிலிருந்து, உணர்வுகளிலிருந்து, மரபணுக்களிலிருந்து நீக்க முடியுமா? எப்படி நீக்குவது?

  சொல்லுங்க முடியுமா?...

  பதிலளிநீக்கு
 4. அடிமைத்தனமும் ஒரு மரபணு பாதிப்பு என்னும்போது எரிச்சலைக் கொண்டு வருகின்றது . ஆனால் எதற்கும் கேள்வி துணிந்து கேட்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் போது மாற்றம் ஏற்ப்படலாம் என்று நம்புகின்றேன் . கடவுள் நம்பிக்கை கூட இப்படித்தான் என்பதையும் நம்புகின்றேன். அற்புதமான பதிவு.

  பதிலளிநீக்கு