2012-11-19

லர் ட்டை: 2



இதற்கு முன்
1  


          னித ரத்தம் ஒரே நிறம் தான். ஆனால் அந்த ரத்தத்தினால் இயங்கும் உடலும் மனமும் வெவ்வேறாக இருக்கின்றன. 'படைக்கும் கடவுள்' பிரம்மனுக்குத் தெரியுமோ என்னவோ, நமக்கு நம்மைப் பற்றி நிறையத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

டிஎன்ஏ ஆய்வினால் இன்றைக்கு நம்மைப் பற்றி, நம் வரலாற்றைப் பற்றி, நம் இயக்கங்களின் மூலாதாரம் பற்றிப் புதிதாக அறிந்துகொண்டே இருக்கிறோம்.

வெள்ளைக்காரன் உடலில் இயங்கும் அதே கொலஸ்டிரால் மருந்து கறுப்பனின் உடலில் சிறப்பாக இயங்காது என்கிற அளவுக்கு இன்றைக்கு நமக்கு விவரங்கள் தெரிந்திருக்கின்றன.

தென்கிழக்காசியக் குடிமக்களுக்கும் பண்டை ஆப்பிரிக்கருக்கரும் இடையில் பொது மரபணுக்கள் இருப்பதாக அறிகிறோம்.

சீனர் மற்றும் இந்தியரின் செவிமெழுகை விட, ஆப்பிரிக்க ஐரோப்பியரின் செவிமெழுகு கடும்வாடை அடிப்பதாக அறிகிறோம்.

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 'B' இரத்தப்பிரிவினர் அதிகம், Rh- பிரிவினர் மிக மிகக் குறைவு என்றெல்லாம் அறிகிறோம்.

பெண்களை விட ஆண்களுக்கு அக்குளிலும் பால்குறிப் பகுதியிலும் அதிகமாக வியர்க்கும் என்றும், ஆசியரை விட ஆப்பிரிக்கருக்கு வியர்வை சுரப்பிகள் அளவில் பெரியன என்றும் அறிகிறோம்.

'slc245a5' எனும் அணுவின் மிகச்சிறிய மாற்றுருக்களே நம் தோலின் பல நிறங்களுக்குக் காரணமாகிறது1 என்று அறிகிறோம்.

ஆண்டவர் தன்னுடைய பிம்பத்தை எடுத்து அதிலிருந்து அனைவரையும் படைத்தார் என்கிறது பைபில். போகட்டும். இத்தனை மாறுபாடுகளும் ஒரே பிம்பத்தால் வருகிறது என்று நம்புவோர், அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள்.

கோவில் மரத்தைச் சுற்றியும் மண்டபத்தைச் சுற்றியும் அதன் பலனாய்ப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று ஒரு புறம் நம்பிக்கையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். 'படைக்கும் கடவுள்' பல பார்முலாக்கள் வைத்திருக்கக் கூடும். தோன்றும் விதத்தில் பார்முலாக்களைக் கலந்து கட்டியிருக்கலாம். நாமென்ன கண்டோம்? பிள்ளை வேண்டி மரம் சுற்றும் பக்தகோடிகள், அக்குளில் வியர்வை வராத நல்ல பார்முலாவாகப் பார்த்துக் கலக்கப் பரமனிடம் வேண்டிச் சுற்றட்டும். 'அம்மா கர்ப்பரட்சே.. வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால ஸ்வாமி... தூய மேரி.. ஒப்பற்ற ரட்சகி வேளாங்கண்ணித்தாயே.. புனித பாத்திமா.. பிஸ்மில்லாஹ் அர் ரஹ்மான் அர் ரஹிம்... எல்லாருமாகச் சேர்ந்து slc245a5 அணுவின் சரியான மாற்றத்தைக் கலந்து சிவப்பு நிற ஆண் குழந்தை ஒன்றை எங்களுக்கு அருளவும்' என்று வேண்டிக் கொள்ளட்டும். ஆண் குழந்தை என்றதன் காரணம், பெரும்பாலான ஆத்திகர்களுக்குப் பெண் குழந்தை பிடிப்பதில்லை - சிவப்பு நிறத்தொரு பெண்ணாக இருப்பினும். கடவுள் கலவையை ஆத்திகம் நாடுவது... அதுவும் சந்தேகமே.

காரணம், பிற மதக் கடவுள்களைப் பொறுத்தமட்டில் அனைத்து ஆத்திகரும் நாத்திகரே.

          குருட்டு நம்பிக்கையிலிருந்து அறிவுப்புறம் வருவோம். மனித இயக்கத்துள் காணப்படும் ஒற்றுமைகளுக்கும் வேற்றுமைகளுக்கும் என்ன பொருள் என்று அறிவியல் நோக்கில் கேள்விகள் ஒருபுறமும், தத்துவ வேதாந்த நோக்கில் கேள்விகள் மறுபுறமும், கேட்கப்பட்டும் பதில்கள் தேடப்பட்டும் வருகின்றன. மனித வேதியலை மரபணுக்களின் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்துத் தொகுத்து, ஏறக்குறைய இன்ன புறக்குணங்களுக்கு இன்ன மரபணுக்கள் சாத்தியமாகின்றன என்று வகுத்தும் விட்டார்கள். ஆராய்ச்சிகளில் வெகுதூரம் வந்திருக்கிறோம், பலவகை சாத்தியங்களும் சான்றுகளும் அலசப்படுகின்றன - இன்ன அகக் குணங்களுக்கு இன்ன அணுக்கள் காரணம் என்றுத் தொகுத்து முடிக்கும் காலம் தொலைவில் இல்லை.

மனித இன மூதாதை தோன்றி இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியது முதல் இன்று வரையிலான பரிணாம வளர்ச்சிக்கு நாற்பதிலிருந்து ஐம்பது லட்சம் வருடங்கள் போல் பிடித்திருக்கிறது. பூமி அதற்கு முன் பல கோடி ஆண்டுகளாக, ஏறத்தாழ நானூறு கோடி வருடங்கள், உருப்பெற்று வளரத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஆயிரம் கோடி வருடங்கள் முன்பே அண்டம் வெடித்து பூமி உண்டாகத் தொடங்கியது. பூமி வெப்பம் அடங்கி வளரத்தொடங்கவே ஆயிரம் கோடி வருடங்கள் போல் பிடித்திருக்கிறது. அதற்குப் பின் முதல் மனித இனம் தோன்ற நானூற்று சொச்சக் கோடி வருடங்களாயின. தற்போதைய மனித இனத்தின் முன்னோடிகள் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் போல் ஆகிறது. அதிலும் மொழியறிவு தோன்றி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகிறது. ஆக, மனித இனத்துக்கு முன்பாகக் கிருமிகள் முதல் மீன் செடி கொடி மிருகங்கள் என்று நிறைய வளர்ந்து அழிந்து வளர்ந்து அழிந்து ஒன்றல்ல, பல மாபெரும் பரிணாமங்கள் வளர்ந்து முடிந்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்களும் ஆய்வு அணுகு முறைகளும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நம்பலாம். அல்லது விஷ்ணுவின் தொப்புள் கொடியில் சோம்பல் முறித்தபடி ஊழி நீர் வடியக் காத்திருந்து உலகையும் மனிதரையும் படைத்தார் பிரம்மன் என்பதை நம்பலாம்.

          நாத்திகம் பல வகைகளில் காணப்படுகிறது.

'கடவுள் கிடையாது' என்போர் ஒரு வகை - atheism.

'கடவுள் இருக்கலாம், அக்கறையில்லை' என்பார் ஒரு வகை - agnosticism.

'இயற்கையே கடவுள், மற்றபடி உருவம் சக்தி எதுவும் கிடையாது' என்போர் இன்னொரு வகை - pantheism. இது இரண்டுங்கெட்டான் நாத்திகம். அல்லது இ.கெ ஆத்திகம்.

'கடவுள் இல்லை' என்ற பிரிவு மட்டுமே முறையான நாத்திகம். அசல் நாத்திகம். நாத்திகக் 'காவலர்கள்' இதை ஏற்க மாட்டார்கள் எனினும், மற்ற இரண்டையும் நாத்திகப் பிரிவுகள் எனலாம். நாத்திகம் ஒர் இலக்கு. அந்த இலக்குக்கானப் பாதைகள் பலவாக இருப்பதில் பாதகமில்லை என்று நினைக்கிறேன். 'இரண்டுங்கெட்டானை' நாத்திகத்தில் சேர்த்ததற்கான காரணங்களைப் பின்னர் பார்ப்போம்.

அசல் நாத்திகர் அழிவுப் பாதையில் செல்வதில்லை. சிந்தனைகள் ஆக்கச் சிந்தனைகளாகவும், அறிவார்ந்த வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன.

அசல் நாத்திகத்தின் வேர், அறிவாகும். ஏதோ ஒரு அபார சக்தி அனைத்தையும் படைத்துக் காத்து அழிப்பதன் முரணை அறிந்துக் களையும் பக்குவம் கொண்டது அசல் நாத்திகம். இல்லாத ஏதோ ஒரு சக்தியின் மேலான நம்பிக்கையின் அடிப்படையில் மனித இனம் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் கண்மூடித்தன சடங்கு வழிபாடு தொட்டப் பிரிவுகளையும் கொள்கைகளையும், அறிவார்ந்த நிலையில் எண்ணிக் களைந்து மனித நேயம் பெருக உழைப்பதே அசல் நாத்திகமாகும்.

அறிவிலி நாத்திகரையும் இங்கே அடையாளம் காண வேண்டும். நாத்திகம் என்ற பெயரில் கடவுள் அடையாளங்களை அழிப்பதும், கடவுளையும் கடவுளை நம்புவோரைத் தாக்குவதையும் செய்வோர் அறிவிலி நாத்திகர். அறிவிலி நாத்திகம் அசல் நாத்திகமே அல்ல. நாத்திகத்தில் கடவுள் எதிர்ப்பு கிடையாது. கடவுளே இல்லை எனும் பொழுது அசல் நாத்திகம் அதை எப்படி எதிர்க்கும்?

அறிவிலி நாத்திகம், ஆத்திகத்துக்கு ஒப்பானது எனலாம். அறிவிலி நாத்திகத்தின் வேர் ஆத்திகத்திலிருந்துப் பிரிந்ததாகும். ஆத்திகம் கடவுளை மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. அறிவிலி நாத்திகமும் அதையே செய்கிறது - கடவுள் எதிர்ப்பையும் கடவுள் வெறுப்பையும் ஆத்திகர் எதிர்ப்பையும் மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆத்திகரை விட அறிவிலி நாத்திகரே கடவுளைப் பற்றி அதிகம் எண்ணுகிறார்கள் எனலாம். இதற்குப் புராணங்களில் பல உதாரணக் கதைகள் உள்ளன. கடவுள் வெறுப்பைத் தூண்டி அழித்து ஆதரவு தந்து ஏற்பதும் கடவுளே எனும் பாணியில் வரும் கதைகள். அறிவிலி நாத்திகர் இதை அறிய வேண்டும். அறிந்துத் திருந்த வேண்டும். ஆத்திகத்தின் வன்முறையும் பகையும் அறிவிலி நாத்திகத்தின் பண்புகள். ஆத்திகக் கண்ணாடியில் பார்த்தால் அறிவிலி நாத்திகம் தன்னைக் காணும். அறிவிலி நாத்திகக் கண்ணாடியில் பார்த்தால் ஆத்திகம் தன்னைக் காணும். ஆத்திகமும் அறிவிலி நாத்திகமும் அழிவுப் பாதையில் பயணம் செய்பவை.

ஆத்திகத்தில் ஆக்கச் சிந்தனைகள் குறைவு. அறிவார்ந்த வெளிப்பாடுகள் குறைவு. இதற்கான உதாரணங்களையும் ஆதாரங்களையும் பின்னர் பார்ப்போம்.

ஆத்திகத்திலும் பல வகை உண்டு. காணாததைக் கடவுளென்பது ஆத்திகம். எனினும், கண்டதையெல்லாம் கடவுள் எனும் ஆத்திகப் பிரிவும் உண்டு. புல்லும் கடவுள், புழுவும் கடவுள், கல்லும் கடவுள், கனியும் கடவுள், எங்கும் கடவுள் எதிலும் கடவுள் என்று முழங்கும் இந்தப் பிரிவு இரண்டுங்கெட்டானுக்கு பல தட்டுக்கள் கீழே எனலாம்.

ஆத்திகர்கள், அசல் நாத்திகரின் எதிரிகள் அல்ல. ஆத்திகர்கள் எப்படி எதிரிகளாக முடியும்? புறத்தே நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நாத்திகர்கள் போலவே ஆத்திகர்களும் காணப்படுகிறார்கள். இருவருக்கும் உள்ளது பகுத்தறியும் அறிவு தானே? ஆத்திகர் மட்டும் திடீரென்று இல்லாத ஒன்றன் பெயரைச் சொல்லி அறிவற்ற செயலோ அல்லது மனித நேயத்துக்குப் புறம்பாக ஏதேனும் செய்கிறார் என்றால்... அது அறியாமை. 'ஆ.. நெருப்புப் பக்கமே போகாதே' என்று அதட்டித் தன் குழந்தையைச் சிறு பொறியினின்றும் விலகச் சொல்லும் அதே வேளையில், 'தீபாராதனை நெருப்பை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்' என்று மணியடித்து முகத்தின் எதிரே நிறுத்தி வற்புறுத்தும் ஆத்திகரின் அறிவுப் பிறழ்சி மீது எரிச்சலோ கோபமோ படுவது முறையாகாது. ஆத்திகரின் அறியாமை களைய நாத்திகர்கள் உதவுவதே முறையாகும்.

மனிதம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் பலனாகக் கடவுள் மதம் சடங்கு இனம் போன்ற மூட நம்பிக்கைகளும் பிரிவுகளும் ஒழிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதே அசல் நாத்திகமாகும். உணர்ந்து அதற்கேற்ற வழியினைத் தொடர்ந்து வகுப்பதே அசல் நாத்திகமாகும். அந்த வழியிலே பொறாமை கோபம் வெறி ஆத்திரம் வன்முறைகளைத் தவிர்த்து, குழம்பியிருக்கும் ஆத்திகரைப் பொறுமையாகக் கனிவுடன் தெளிவை நோக்கி நடத்திச் செல்வதே நாத்திகத்தின் கடமையாகும். நாத்திகத்தின் கடமையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


1க்ரெகரி பார்ஷ் என்பாரின் அறிக்கை, ஸ்டேன்பர்டு பலகலைக்கழகம்

► தொடர்க          

இதற்கு முன்

1  



7 கருத்துகள்:

  1. பெயரில்லாநவம்பர் 19, 2012

    நீங்கள் அறிகிறோம் அறிகிறோம் என்று எழுதி இருப்பது அனைத்தையும் நான் இந்த பதிவை படித்ததன் மூலம் இன்றுதான் அறிந்து கொண்டேன். :)

    //பிற மதக் கடவுள்களைப் பொறுத்தமட்டில் அனைத்து ஆத்திகரும் நாத்திகரே.// :)) நல்லா சொன்னீங்க. அவங்க கடவுள், அவங்க அவங்களுக்கு ஒஸ்தி.

    // அசல் நாத்திகத்தின் வேர், அறிவாகும். ஏதோ ஒரு அபார சக்தி அனைத்தையும் படைத்துக் காத்து அழிப்பதன் முரணை அறிந்துக் களையும்........மனித நேயம் பெருக உழைப்பதே அசல் நாத்திகமாகும். //
    இந்த விளக்கம் அருமை. நான் நாத்திகர் இல்லைன்னு சொல்றவங்க கூட முதல்ல நாத்திகம்னா என்னன்னு சரியா தெரிஞ்சுக்கறது நல்லது.

    //ஆத்திகரை விட அறிவிலி நாத்திகரே கடவுளைப் பற்றி அதிகம் எண்ணுகிறார்கள் எனலாம்.// சரிதான். :) ஒண்ணை இல்லை இல்லைன்னு பிரசாரம் பண்றவங்க இருக்கறதை இன்னும் உறுதி செய்யறா மாதிரிதான் தோணும்.

    நல்லா இருக்கு. நீங்க சொல்ல வர கருத்துக்களை தெளிவா, சுவாரசியமா எழுதி இருக்கீங்க. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. புரிந்தும் புரியாததுமாய் ஒரு குழப்பத்தில் நான். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை அவர்களே! எழுதவிருப்பது எது என்பது பற்றிய தெளிவு, அதனால் கிடைக்கும் கம்பீரம் சொல்லாடல், எல்லாமே சிறப்பு ! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி மீனாக்ஷி, நிலாமகள், காஸ்யபன், ...

    பதிலளிநீக்கு
  5. இதோ வர்றேன்.. வர்றேன்...

    இப்படிக்கு

    கர்லா கட்டை ஆத்திகன்.

    பதிலளிநீக்கு
  6. கர்லாக் கட்டை ஆத்திகனின் பின்னால் நின்று கொண்டு கலர்சட்டை நாத்திகனின் வாதங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். .

    பதிலளிநீக்கு
  7. //பெரும்பாலான ஆத்திகர்களுக்குப் பெண் குழந்தை பிடிப்பதில்லை //

    என் சாய்ஸிலே எப்போவும் பெண் குழந்தைகளுக்குத் தான் முதலிடம். அவங்களுக்குனு தாலாட்டுப் பாடல்களே இல்லையேனு வருந்தும் அளவுக்குப் பிடிக்கும். தத்தித் தத்தி நடக்கும் பெண் குழந்தையைப்பார்த்திருக்கிறீர்கள் தானே! அப்போ அதன் கண்களில் தெரியும் ஒளியும், குறும்பான புன்னகையும் மயக்கும். மனதைச் சூறையாடும். :))))


    //ஆத்திகமும் அறிவிலி நாத்திகமும் அழிவுப் பாதையில் பயணம் செய்பவை.//

    விளக்கக் காத்திருக்கேன். ஹாஹாஹா!


    //ஆத்திகத்தில் ஆக்கச் சிந்தனைகள் குறைவு. அறிவார்ந்த வெளிப்பாடுகள் குறைவு. இதற்கான உதாரணங்களையும் ஆதாரங்களையும் பின்னர் பார்ப்போம்.//

    சொல்லுங்க கேட்கிறேன். அப்புறம் தான் என்னோட பதில் எல்லாம். :))))

    பதிலளிநீக்கு