2013-03-21

லர் ட்டை: 4



இதற்கு முன்
1   2   3


    றத்தாழ மூவாயிரம் வருடக் கலாசார வளர்ச்சிக்குப் பின்னும், அன்றைக்குப் போல் உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அடிப்படை வேற்றுமை. அதற்குப் பிறகு மதம், இனம், குலம், பணம், படிப்பு என்று அடையாள அடிப்படையில் பல பிரிவினைகள். வேர் என்னவோ கடவுள் நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது.

    ன் பிள்ளைகள் கடவுள் பற்றிக் கேட்ட போது எனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லிவிட்டேன். என் பிள்ளைகள் துருவித் துருவிக் கேட்பவர்கள். பிஞ்சுமனப் பிள்ளைகளுக்கான குணச்சித்திரம். அவர்களின் ஐந்து-ஏழு வயதுக் காலத்தில் வீட்டில் நடைபெற்ற வழக்கமான உரையாடல்:
"கடவுள் உண்டா அப்பா?"
"எனக்குத் தெரியாது"
"கடவுள் உண்டு என்று நம்புகிறாயா டேடி?"
"இல்லை, நான் நம்பவில்லை"
"அம்மா நம்புகிறாரா?"
"அம்மாவைக் கேட்க வேண்டும்"
"கடவுள் இல்லை என்கிறார் அம்மா. இருந்தால் மனிதர்கள் பிராணிகளிடம் அன்போடு இருப்பார்கள் என்கிறார்"
"சரி"
"நான் கடவுள் இருப்பதாக நம்ப வேண்டுமா?"
"உன் விருப்பம்"
"நம்புவதற்கு ஏதேனும் காரணம் உண்டா அப்பா?"
"காரணம் எதுவும் கிடையாது"
"பிறகு நான் ஏன் நம்ப வேண்டும்?"
"அவசியமேயில்லை"
"நம்பவில்லையென்றால் கடவுள் தண்டிப்பாரா?"
"தண்டிக்க மாட்டார்"
"கடவுள் பெண்ணா டேடி?"
"தெரியாது"
"ஜீசஸ் தான் கடவுள் என்கிறார் பாட்டி. ஜீசஸ் ஒரு ஆண் தானே?"
"ஆமாம்"
"அது சரியில்லை டேடி. ஐ மீன்.. கடவுள் ஏன் ஆணாக இருக்க வேண்டும்?"
"தெரியாது. ஆனால் உன் கேள்வி புத்திசாலித்தனமானது"
"கடவுள் ஒரு மிருகமோ?"
"தெரியாது"
"இந்தியா பாட்டி உனக்குக் கொடுத்த படங்களில் இருப்பது போல.. ஒரு வேளை இந்தியக் கடவுள்கள் மட்டும் மிருகங்களோ?"
"தெரியாது"
"உனக்கு ஒன்றுமே தெரியவில்லை டேடி"
"ஹிஹி"
"சிரிக்காதே.. அப்ப கடவுள் என்னைத் தண்டிக்கமாட்டார் என்பது மட்டும் எப்படித் தெரியும்?"

    கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, கண்மூடி மனிதர்கள் தண்டிப்பார்கள் என்ற கவலை எனக்கு உண்டு. இத்தனை வளர்ச்சிக்குப் பின்பும் கடவுள்-மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அமெரிக்கச் சமூகம் என்றில்லை, உலகச் சமூகமெங்கும் இதே கதை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விசித்திரமாகப் பார்க்கும் பார்வை. எண்ணம். செயல்.

உரையாடல்கள் நிற்கவில்லை. சில வருடங்கள் பொறுத்து:
"அப்பா.. கடவுள் நம்பிக்கையில்லைனு என் டீச்சர் கிட்டே சொன்னேன்.. ரொம்பக் கோபமாயிட்டாங்க.. நீ நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து டீச்சரையும் ப்ரின்ஸ்பலையும் பார்த்துப் பேசணும்"
பள்ளிக்குச் சென்று, பிள்ளைகளின் ஆசிரியருடன் பேச்சு வார்த்தை. போராட்டம்.
"உங்கள் பிள்ளை நம் நாட்டின் அடிப்படை நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிறார்"
"அடிப்படை நம்பிக்கைகள்... என்றால்?"
"ஹ்ம்ம்.. உங்களுக்குத் தெரிந்திருக்குமே.. கடவுளை நம்புகிறோம் என்பதே..you know.. in god we trust"
"நான் அறிந்தவரை அமெரிக்காவின் அடிப்படை நம்பிக்கை அதுவல்ல. அமெரிக்கா தோன்றிய தினத்திலிருந்து அதன் அடிப்படை நம்பிக்கைகள் வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கானத் தேடல் இவ்வளவே.. life, liberty and pursuit of happiness.. and our allegiance.. liberty and justice.. you should check it out"
"இருக்கலாம்.. எனினும் நாம் அனைவரும் கடவுளின் கண்காணிப்பில் ஓர் நாட்டு மக்கள்.. we are one nation under god.. அதை மறக்கக் கூடாது"
"சரி"
"நீங்கள் இந்தியக் கடவுள்களை நம்புகிறீர்களோ ஒருவேளை?"
"கடவுள்கள் நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்கள் என்பது தெரியாது. i didn't know gods had nationalities or operated within borders.. but, no, we don't believe in any god"
"தேவையில்லாத கிண்டல். but seriously, there is no pursuit of happiness without god.. கடவுள் இல்லாமல் மகிழ்ச்சியே கிடையாது.."
இவருடன் பேசி என்ன பயன் என்று தோன்றியது. ஏதோ சமாதானம் சொல்லி வெளியே வந்தேன். மாலை வீடு வந்ததும் பிள்ளைகளிடம் இனிமேல் இது போல் பள்ளியில் பிரச்சினை கிளப்ப வேண்டாம் என்றேன்.
"ஏன்?"
"டீச்சர்களுக்கு உன் நிலை பிடிக்கவில்லை"
"அப்படின்னா.. இப்ப கடவுளை நம்புறதா சொல்லணுமா?"
"தேவையில்லை.. கடவுளை நம்பவில்லைனு சொல்லாமல் இரு போதும்"
"ரெண்டும் ஒண்ணு தானே?"
"இத பாரு. கடவுள் நம்பிக்கையில்லைனு சொல்லாதேனு சொல்றேன்.. ரெண்டும் ஒண்ணு தான்.. ஆனா வேறே"
"whatever.."
"இத பாரு.. இதைப் பெரிசு படுத்தாதே.. உன்னோட கடமை வேலை எல்லாம் படிப்புல கவனம் செலுத்தி நல்ல மாணவரா இருக்க வேண்டியது தான்.. புரியுதா?"
"அப்போ.. டீச்சர் கேட்டா.. என்னைப் பொய் சொல்லச் சொல்லுறே"
"இல்லை.. உண்மையைச் சொல்ல வேண்டாம்னு சொல்றேன்.."
"whatever.."
அத்துடன் அன்றைய மாலையின் நிம்மதி தொலைந்தது.

    ஆத்திகச் சமூகத்தில் ஆத்திகப் பிள்ளை வளர்ப்பே எளிதல்ல. எனில், நாத்திகப் பிள்ளை வளர்ப்பு இன்னும் கடினமானது. நாத்திகம் புழங்கும் வீடுகளில் பிள்ளை வளர்ப்புக்குச் சுலபமான வடிகால்களோ வழிகளோ இல்லை.

ஆத்திகர்களால் எல்லாவற்றையும் கடவுளின் செயலாகச் சொல்லித் தங்கள் அறியாமையைச் சுலபமாக மறைத்துவிட முடிகிறது. தெருவில் தடுக்கி விழுந்தால் "இன்னைக்கு அப்படி விழணுமுன்னு எழுதியிருக்குது" என்றோ, "காலையில பிள்ளையாரைக் கும்பிட்டுப் போன்னு சொன்னப்ப கேக்காம ஓடினே இல்லே.. அதான் தடங்கல் வந்து தடுக்கி விட்டுருச்சு" என்றோ கூசாமல் வருந்தாமல் கண்ணையும் அறிவையும் கட்டி விட முடிகிறது.

நாத்திகம் சார்ந்த வளர்ப்பு அப்படியல்ல. தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இயற்கையின் விளைவுகளாகட்டும், மனிதர்களின் செயல்களாகட்டும்.. எல்லாவற்றுக்கும் ஒரு அறிவுசார்ந்த விளக்கம் சொல்லி பிள்ளைகளின் மனதைச் சீராக்க உதவி செய்ய வேண்டியிருக்கிறது.
"சூரியனை உண்டாக்கியது ஜீசஸ் தானே டேடி?" என்றான் மகன்.
"இல்லை" என்றேன்.
"அப்ப இந்துக் கடவுள் உருவாக்கிச்சா?"
"இல்லை"
"மொகாமெட்?"
"சூரியனை யாரும் உருவாக்கவில்லை"
"டேடி.. உனக்கு எதுவும் தெரியலை. ஸ்கூல்ல நீ 'F' தான் வாங்கியிருப்பே"
"சரி. சூரியனைப் பத்தி என்ன சொன்னாங்க டீச்சர்?"
"உலகத்துல எதுவும் நடக்கணும்னா சூரியனோட சக்தி வேணும்னு சொன்னாங்க"
"சூரியன்ல என்ன இருக்கு தெரியுமா?"
"முழுக்க முழுக்க நெருப்பு. சரியா?"
"ம்ம். சூரியன்ல இருப்பது முழுக்க முழுக்க gas"
விழுந்து விழுந்துச் சிரித்தான். "குசுவா?"
"அதுவும் வாயுதான். சூரியன்ல இருப்பது ஹைட்ரஜன்.."
"அப்படின்னா?"
"ஒரு gas. இப்போதைக்கு அது போதும். இங்கே வா".
கணினியில் ஒரு படத்தை வரையத் தொடங்கினேன். மகன் இன்னும் விசித்திரமான ஓசைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான். மேசை விளக்கை ஒரு நிமிடத்துக்கு மேல் எரியவிட்டு அணைத்தேன். அவனை அழைத்து பல்பைச் சுட்டினேன்.
"இந்தா, இதைத் தொடு"
"என்னை என்னா லூசுனு நினைச்சியா? அது சுடும். நீயே தொடு"

ஜூரத்துக்கு உபயோகிக்கும் டெம்பரசர் பட்டி ஒன்றைப் பிரித்து பல்பில் ஒட்டினேன். விர்ரென்று நூற்றுப்பத்து பேரந்ஹைட்டைத் தொட்டுச் சுர்ரென்று இளகிச் செத்தது பட்டி.
"இதோ பார், நூத்துப்பத்து டிகிரி. சூரியனைத் தொட்டா இது போல நூறு மடங்கு சுடும். சூரியன்ல இருக்குற gas எரியும் போது சக்தி கிடைக்குது, அதுவே ஒளியாவும் சூடாவும் பூமிக்கு வருது"
"அப்ப சூரியனை யாரும் உண்டாக்கினா அவங்க கையெல்லாம் சுட்டிருக்குமே?"
"ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ? இந்தப் படத்தைப் பாரு. அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"
"அப்ப உலகம் அழிஞ்சிடுமா? நாமெல்லாம் செத்துருவோமா?"
"கடலுக்கடியில ரொம்ப ஆழத்துல இருக்குற சில புழுக்களும் கிருமிகளும் தவிர மிச்ச எல்லாம் செத்துரும்"
"புழு பூச்சி உயிரோட இருக்குமா? அப்ப கடவுள் நம்மை சாகடிச்சுடுவாரா? this is not fair. grandma said god loves us" என்றான்.
"இந்தச் சூரியன் அழிய இன்னும் அஞ்சு பிலியன் வருசமாவது ஆகும். இதோ பார். நடுவுல இருக்கோம். இன்னும் இவ்வளவு தூரம் எரிஞ்சு வரணும். அதனால கவலைப்படாதே"
"அப்ப அந்த டயத்துல எல்லா மனுசங்களும் செத்துடுவாங்களா? பூமிக்கு என்னாகும்? this is not fair"
"யாருக்குத் தெரியும்? சூரியன் அழியுறதுக்கு முன்னால நாம பூமியைத் தூக்கிக்கிட்டு வேறே ஏதாவது சூரியனைத் தேடிப் போகலாம்"
"இப்படி அழிக்கணும்னா எதுக்காக கடவுள் இதை உண்டாக்கணும்? makes no sense"
அவன் இன்னும் 'not fair'ல் இருந்தான். எனினும், 'கடவுள் இதைப் படைத்தார்' என்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணியது சற்று நிறைவாக இருந்தது. இது ஒரு நல்ல துவக்கம் என்று தோன்றியது.

    ளமையிலேயே கற்பிக்க வேண்டும். ஒரு புறம் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' சொல்லிக் கொடுப்பது போல இன்னொரு புறம் தெரிந்த உண்மைகளையும் சொல்லித் தர வேண்டும். "பூமியைக் கடலுக்குள் கொண்டு ஒளிப்பதா?. கடலே பூமிக்குள் தானே இருக்கிறது? பிறகு பன்றி வேஷமிட்டு பூமியைக் கடலடியிலிருந்து மீட்பதா? ஒரு படகில் உலகின் அத்தனை ஜீவராசிகளின் பிரதிநிதிகளை அடைத்து வெள்ளம் வடியும் வரை பார்த்திருப்பதா? வெள்ளத்தில் எல்லாமே அழிந்தது என்றால் திடீரென்று ஒரு பறவை மட்டும் எப்படி உயிரோடு வெளியே திரிந்தது?" போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். வீட்டிலும் வெளியிலும் எண்ணச் சுதந்திரம் வேண்டும். 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும்.

நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் நாத்திகம் இயல்பாகவே கல்வியாக வழங்கப்பட்டிருப்பதை அறியலாம். நான்காம் நூற்றாண்டு வாக்கில் 'சார்வகம்' எனப்படும் கடவுள்/மதம் விலக்கியத் தத்துவக்கல்வி நம் நாட்டில் இருந்தது. மெள்ள அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கும் வெகு காலம் முன்னால் கடவுள், மதம், மற்றும் மூட நம்பிக்கைகளின் எதிர்வாதமாக நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களையும் புராணங்களையும் பராமரிக்கும் அளவுக்கு இவற்றைப் பராமரிக்கவில்லை.

நேர்மையானக் கல்வியை வழங்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஒருதலைக் கல்வியில் முழுமையான அறிவோ பக்குவமோ வளராது என்பது நமக்கே புரியவில்லை. அரசாங்கத்துக்கு எங்கே புரியப்போகிறது? இளமையிலேயே படித்தால்.. பிடித்தால்.. இன்னும் நூறு வருடங்களுக்குள் கடவுள் மதம் போன்ற குருட்டு நம்பிக்கைகள் தானாகவே அடங்கி ஒழிய வாய்ப்பு உண்டு.

இதற்காகத் தனியாக ஏதும் செய்யத் தேவையில்லை. கடவுள் இருப்புச் சிந்தனைகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் கடவுள் மறுப்புச் சிந்தனைகளுக்கு வழங்கினால் போதும். இதில் நான்கு பாடங்கள் என்றால் அதில் நான்கு பாடங்கள். "தெய்வம் நமக்குத் துணை பாப்பா" என்று சொல்லிக் கொடுத்தால் "கடவுள் இல்லையடி பாப்பா" என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதில் குழப்பம் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்றாலும் கண்மூடித்தனம் உண்டாக வாய்ப்பில்லை. குழப்பத்தை விடக் கண்மூடித்தனம் கொடியது. பிள்ளைகள் சிந்திக்கக் கூடியவர்கள். நல்ல ஆசிரியர்களின் துணையுடன் தங்கள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்களைக் கண்மூடித்தனக் கிணற்றுக்குள் தள்ளிவிடுவது நாம் செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு', 'மதத்தை மதி' என்பவற்றின் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இது நாத்திகச் செய்தியாக இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம். அப்படியெனில், நாத்திகத்தின் செய்தி என்ன? கடவுள் கிடையாது என்பதே. கடவுள் இல்லாமல் உலகம் இயங்கி வருகிறது, தொடர்ந்து இயங்கும் என்பதே. கடவுள் மத நம்பிக்கைகள் மனிதம் முழுமையடைவதைத் தடுக்கும் இடர்கள் என்பதே.


இந்தப் பதிவின் பெரும் பகுதி 'மூன்றாம் சுழி'யில் நான் எழுதியக் கட்டுரைகளிலிருந்து.

► தொடர்க          

இதற்கு முன்
1   2   3





19 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை கேள்விகள்... குழந்தைகளுக்கு மட்டுமா இவை சிந்திக்க தோன்றுகிறது...? முடிவில் இரு பத்திகளும்... முடிவில் உள்ள ஒரு வரி போதும்...

    பதிலளிநீக்கு
  2. எனது சந்தேகம்.
    பெரியாரின் வழி வந்தவர்கள் கடவுள் இல்லை என ஆரம்ப காலத்தில் நம்பியவர்கள், இறுதிக்காலத்தில் தடுமாறுவது ஏன்? மறைமுகமாக பூஜைகள் செய்வதும் பரிகாரம் செய்வதும் ஏன் ? எது அவர்களை தடுமாற வைத்தது ?

    பதிலளிநீக்கு
  3. அருமையான கேள்வி சிவகுமாரன்.
    நானும் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன், விவாதித்திருக்கிறேன் (?).

    சில காரணங்கள் தோன்றுகின்றன.
    1. அவருடைய செயல்கள் பேச்சுக்கள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் பெரியாரின் இனப்பகையினூடே உண்மையிலேயே கடவுள் மறுப்புக் கொள்கை இருந்ததாக நம்புகிறேன். பெரியாரின் வழி வந்த கறுப்புச் சட்டை நாத்திகர்களின் பின்னணி இனப்பகை மட்டுமே நம்புகிறேன். கடவுள் மறுப்பு என்ற ideaவை ஏற்றார்களே தவிர, கடவுள் மறுப்பு என்ற கொள்கையை ஏற்கவில்லை. அது வசதிக்கேற்றதாகிப்போனது. பெரியாருக்குக் கடவுள் மறுப்புக் கொள்கைகளை வைத்துக் காசு பண்ண வேண்டிய அவசியமே இருக்கவில்லை. பிற கறுப்புச்சட்டைகளைப் பற்றி அப்படி சொல்ல முடியவில்லை.
    2. 'அறியாத' ஒன்று என்றைக்குமே அச்சம் தரும் தன்மையது. அச்சம் இருப்பதால் தன்னை இழக்க வைக்கிறது. நம்பிக்கையை அச்சம் வெல்வது நாம் நம் தினசரி வாழ்வில் காண்பது தானே? கடவுள் நம்பிக்கையென்றில்லை, எந்தச் செயலும் அதில் சற்று 'அறியமுடியாத' குணமிருந்தால் நம்மை அவ்வப்போது நிலைமாற வைக்கிறது. (உ.ம்: திருமணம், புதுவேலை, புதுப்பயணம், விவாகரத்து, புது நட்பு போன்றவையே நம்மைச் சிறிது அச்சம் கொண்டு தயங்க வைக்கின்ற போது மரணம், பிறவி, நரகம் போன்றவை நம்மைத் தீவிர அச்சத்துக்குள்ளாவதில் வியப்பில்லையே?). இங்கே பெரியார் வழித்தோன்றல்கள் கதையும் அப்படியே. துன்பம் நேர்கையில் அல்லது மரண அண்மையில் நம்பிக்கையை அச்சம் வெல்கிறது.
    3. அறியமுடியாத ஒன்றைப் பற்றிய அறியாமை மட்டுமல்ல, அறிய முடிவதைப் பற்றி அறியாமை. பெரியார் வழித்தோன்றல்கள் பலருக்கு அறிவில்லை என்றே நினைக்கிறேன். கடவுள் இருப்போ மறுப்போ எதைப்பற்றியும் ஆழ்ந்த அறிவில்லாதது அவர்களை நிலைமாற வைக்கிறது. "சாமி கும்பிட்டால் என்ன குறைந்து விடப் போகிறது - யாருக்குத் தெரியப் போகிறது - தெரிந்தால் என்ன இப்போது" போன்ற எண்ணங்கள் பிறரை ஏமாற்றவில்லை, தன்னை ஏமாற்றுவன என்ற அறிவு இவர்களுக்கு ஏற்படுவதில்லை. காரணமில்லாதக் குற்ற உணர்வுடன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் அத்தனை பேரும் கண்மூடிகள் தான். பெரியார் வழித் தோன்றல்கள் உட்பட.

    என் சொந்தம் சுற்றம் கூட என்னிடம் அடிக்கடி "பத்து இருபது வருசத்துல பழையபடி சாமி கும்பிடுவே பாரு" என்கிறார்கள். "போகிற" காலத்தின் பயம் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது என்று நினைக்கிறேன்.

    நான் அறிந்தவரையில், என் அனுபவத்தில்.. கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு. திரும்பிப் போகத் தேவையற்ற பாதை.

    பதிலளிநீக்கு
  4. There is no necessity to believe in God and approach God if everyone speaks the truth from the heart. Even the doctors in America say in hospital while enquiring about the result of the operation, Pray to God. Recently, even NASA people said these words when enquired about the likely effect of an asteroid which is fast approaching the earth. Why there are so many temples in India and why the foreigners are thronging it while visiting India?
    Above all, I have a feeling that the side effect of atheist principle is, more people started believing in God which means more and more people became theists only after propagating against the existence of God by the so called atheists.

    பதிலளிநீக்கு

  5. ஆத்திகம் நாத்திகம் பற்றிய எண்ணங்கள் தொன்று தொட்டே இருக்கிறது. அதைப் பற்றி சிந்தித்து எழுதத் தூண்டுவது எது.? அந்த சிந்தனைகளால் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். முதலில் சொல்ல வருபவற்றை அழகாகச் சொல்கிறீர்கள்.தெளிவான சிந்தனை ஆற்றொழுக்குபோல எழுத்து நடை. வாழ்த்துக்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுகேள்வி.தெரியாத ஒன்றை இல்லை என்று சொல்லலாமா என்று கேட்டேன். இருக்கிறது என்று சொல்லலாமா என்று எதிர்க் கேள்வி எழுகிறது. கடவுள் என்பது ஒரு கான்செப்ட். கடவுளுக்கு சில attributes களைக் கொடுத்து எல்லாவற்றுக்கும் அவரே காரணம் என்று சொல்வது ஒரு வகை,’அவனின்றி ஓரணுவும் அசையாது” நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகளுக்கு அவன் மேல் பாரத்தைப் போட்டு நிம்மதி தேட இது ஒரு வழி. நல்ல குணங்கள் என்று நாம் நம்புவதை எளிதில் புரிய வைக்கக் கதைகள். நாம் கதை மாந்தரை விட்டு விட்டுக் கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கும் கடவுள் எனும் கான்செப்டால் , மதம் எனும் பெயரால் உடன் இருப்பவர்களை சிந்திக்கச் செய்யாமல் திசை திருப்பி, ஏற்ற தாழ்வுகளுக்கு வழி வகுத்த மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கைகளில் கோபம் உண்டு. அதுவே என்பதிவுகள் பலவற்றில் தலை காட்டும். When trying to create new ideas ,and thoughts we always get into the trap of what we have learnt and known. To chart new territories and new ideas the most important thing is to unlearn what we have known.Otherwise we will never be able to chart new path. Staying focused and being conscious of unlearning things is essential Realising and working hard on that--very difficult though.

    பதிலளிநீக்கு
  6. படிக்கத் துவங்கியபோது எனக்குள் இருந்த கன்மூடித்தனங்கள் மங்கிப் போனது.

    //குழப்பத்தை விடக் கண்மூடித்தனம் கொடியது. பிள்ளைகள் சிந்திக்கக் கூடியவர்கள். நல்ல ஆசிரியர்களின் துணையுடன் தங்கள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்களைக் கண்மூடித்தனக் கிணற்றுக்குள் தள்ளிவிடுவது நாம் செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.//

    ஆத்திகர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஒரு சைக்கோ தெரபி எனக் கருதுகிறேன்.

    நாத்திகத்தை கைக்கொண்ட பெரியாரும் தன தந்தை உருவாக்கி பராமரித்த கோயிலை தொடர்ந்து பராமரித்தார் எனப் படித்த போது இரண்டுக்குமான தெளிவும் புரிதலும் அவருக்கிருந்ததாக தோன்றியது.

    உங்கள் பாணியில் அறிந்ததை தெளிந்ததை குழந்தைகள் கேள்வி கேட்கும் பட்சத்தில் நடுநிலைமையோடு நேர்மையாக சொல்லிவிடுவது நலம். தெளிவதும் கைக்கொள்வதும் அவர்கள் கையில். என் குழந்தைகளும் பல எதிர்வாதங்கள், கேள்விகள் எழுப்பும் சிந்திக்கும் திறம் பெற்றவர்களே. உங்கள் பதிவுகளை படிக்கத் தருவதால் என் வேலை சுலபமாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  7. பலரும் தொட்ட களம்...முற்றிலும் வித்தியாசமான கோணத்தில்....

    என்னைக்கேட்டால்...I am at the crossroads...Just for the sake of not swaying my daughter in either direction...I prefer to go thru the motions...and maintain the status quo ...

    தொடருங்கள்...வழக்கமான வீரியத்தோடு...

    பதிலளிநீக்கு
  8. || கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு. ||

    எந்த வகையான தெளிவு என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவல்..(குதர்க்கமான கேள்வி அல்ல).

    எனக்குக் கடவுள் நம்பிக்கையின் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.

    ஒரு வேளை 'தெளிவு நாணயத்தின்' இரு பக்கங்கள்தான் கடவுள் நம்பிக்கையும் நம்பிக்கை அற்றிருப்பதுமோ?!?

    பதிலளிநீக்கு
  9. வருக ரெ வெரி.
    அடுத்தவருக்காக (பிள்ளையானாலும்) நம் நிலையை compromise செய்வது can backfire. என் அனுபவத்தில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நிச்சயம் அறிவன். நான் பெற்ற தெளிவை நாலு பேர் பெறவேண்டும் என்பதற்காகவே எழுதத் தொடங்கினேன்.

    என் அனுபவத்தில் கடவுள் நம்பிக்கையினால் அமைதி கிடைக்கலாம், தெளிவு கிடைக்காது.

    relatively speaking, அமைதியில்லாமல் சுலபமாக வாழ முடியும் (எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் - எதையோ அல்லது யாரையோ சாக்கு சொல்லி); ஆனால் தெளிவில்லாமல் வாழ்வது மிகவும் கடினம் (எத்தனையோ பேர் வாழ்கிறார்கள் - இது ஒரு வாழ்க்கையா என்றுத் தங்களைத் தாங்களே வெறுத்துக் கொண்டு).

    நான் சொல்லும் அமைதி/தெளிவு உதாரணம் கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட பொது வழக்கம் என்றாலும், தெளிவு பெற முடியாத வாழ்க்கையை வாழ்வோர் பெரும்பாலும் கண்மூடிகளாகவே இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவர்களும். it runs deeper than we can imagine. it is easy to imagine god, but the ill effects of 'god' runs beyond imagination.

    பதிலளிநீக்கு
  11. 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும். //

    வளரும் குழந்தைகளுக்கு பக்தியோகம் வேண்டும். பக்தி மார்க்கம் அவனை நல்வழி படுத்தும். தானே உணர்ந்து கொண்ட பின் தெளிந்து கொண்ட பின் வருவது ஞான மார்க்கம் என்பார்கள்.
    வர வர கோவில்களில் இடை தரகர்கள் படுத்தும் பாடும், நாட்டில் நடக்கும் அநியாய்ங்களும் உங்களை போல்
    எல்லோரையும் சிந்திக்க வைக்கும்.

    //ஆத்திகர்களால் எல்லாவற்றையும் கடவுளின் செயலாகச் சொல்லித் தங்கள் அறியாமையைச் சுலபமாக மறைத்துவிட முடிகிறது. //

    காலம் காலமாய் அவன் பார்த்துபான்,
    என்று தங்கள் செயல்களை , கடமைகளை நிம்மதியாக செய்யும் நம்பிக்கை அது.
    சாமி கும்பிடாமல் தங்கள் கடமைகளை
    சரிவர செய்தாலே போதும் நீங்கள் சொல்வது போல். ஒழுக்கம், ஈகை, கடமை இது இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் சார். சாமி கும்பிடுவதும், கும்பிடாததும் அவர் அவர் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  12. படுத்தேன்...ரசித்தேன். இதை ஒட்டி ஒரு இடுகை வரும்...

    பதிலளிநீக்கு
  13. மனிதக்குல பரிணாம வளர்ச்சியினைக் கண்ணுறும் போது ஒன்றை மட்டும் தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது.

    நம் தாத்தா காலத்து பக்தியுணர்ச்சி, நம் அப்பா காலத்தில் குறைந்த்து வந்திருக்கிறது. நம் அப்பா காலத்து பக்தியுணர்ச்சி, நம் காலத்தில் குறைந்திருக்கிறது.

    நம் காலத்து பக்தியணர்ச்சி கண் முன்னாலேயே குறைந்து வருகிறது. எனில், நாளைய தலைமுறை?

    பதிலளிநீக்கு
  14. இது ஏற்கெனவே படித்திருக்கிறேன். பய உணர்ச்சியைத் தோற்றுவித்தது சில பெரியவர்கள். :))) ஆனால் கடவுளை நம்புபவர்களுக்குத் தெளிவு இருக்காதுனு சொல்வதை ஏற்க முடியலை. அடுத்ததுக்குக் காத்திருக்கேன். :)))

    பதிலளிநீக்கு
  15. நம் வாழ்க்கை அமைதியாக, குழப்பமில்லாமல் தொடர்வதற்கு ஏதாவது ஒரு நம்பிக்கை தேவையாக இருக்கிறது என்ற அடிப்படையில் நம்மை மீறிய, நம் கட்டுப்பாட்டில் அடங்காத இயற்கை சக்தியை ஏன் நம்பக்கூடாது?

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  16. நன்றி பவளசங்கரி. நம் வாழ்க்கை குழப்பமில்லாமல் தொடர தன்னம்பிக்கை போதும் என்று நம்புகிறேன். 'இயற்கை சக்தி' என்பது ஆத்திகமல்ல.

    பதிலளிநீக்கு
  17. கடவுளை நம்புகிறவர்கள் தன்னம்பிக்கை அற்றவர்களா? என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை என்பவர்களே தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்பேன். :)))))

    பதிலளிநீக்கு
  18. நம் தாத்தா காலத்து பக்தியுணர்ச்சி, நம் அப்பா காலத்தில் குறைந்த்து வந்திருக்கிறது. நம் அப்பா காலத்து பக்தியுணர்ச்சி, நம் காலத்தில் குறைந்திருக்கிறது.

    நம் காலத்து பக்தியணர்ச்சி கண் முன்னாலேயே குறைந்து வருகிறது. எனில், நாளைய தலைமுறை?
    !!!!ம்ம்

    பதிலளிநீக்கு
  19. தனிமரம்,

    கவலையே வேண்டாம், இன்றைய தலைமுறையும் பக்தியில் ஈடுபாடு கொண்டதே. கொஞ்சம் புதிய முறையில் பக்தி செலுத்துகின்றனர் என்றாலும் பக்தி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். குறைந்தெல்லாம் போகலை.

    நீங்க சொல்வது ஆன்மிகத் தேடல்னு நினைக்கிறேன். அது தான் தாத்தா காலத்தில் இருந்து குறைந்து வந்து இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆன்மிகம் வேறே, பக்தி வேறேனு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். :))))))

    பதிலளிநீக்கு