2013-08-24

லர் ட்டை: 5



இது ஒரு சுழல் என்று அறியாத மனங்கள், மூட நம்பிக்கைகளில் மூழ்கிச் சாகின்றன.
மனம் பரிதாபமாகச் செத்தபின் உடல் பலத்தோடு வாழ்ந்தென்ன பயன்?

இதற்கு முன்
1   2   3   4


    நீண்ட இடைவெளிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    என் ஆத்திக நண்பர் ஒருவர் பிள்ளையாருடன் ஒப்பந்தம் செய்யாமல் எந்தச் செயலையும் தொடங்கியதில்லை; இந்தியாவில் இருக்கும் குலதெய்வத்துக்கு லஞ்சம் கொடுக்காமல் தொடங்கியதில்லை; இந்திய மதகுருவின் மடத்துக்குக் காணிக்கை செலுத்தாமல், பிரபல கோவிலுக்குக் கணிசமான தொகை வழங்காமல் தொடங்கியதில்லை. வெளியே கடவுள் மதம் பூஜை தானம் தருமம் என்று ஒளிக்கற்றையாகத் திரியும் பலர் உள்ளே கரும்புள்ளிகளாகவே இயங்குகிறார்கள். நண்பரும் வீட்டில் அப்படியே. வெளியே இப்படி நடந்து கொண்டாலும், வீட்டில் மனைவியோ மக்களோ பத்து ரூபாய்க்கு ஏதாவது செலவு செய்தால் பெருங்கோபத்தில் கத்துவார். பல காலமாக அவர் செய்து வந்த உள்ளுறவுப் பராமரிப்பு தவறுகளினால் வாழ்வு சீர்குலையத் தொடங்கியது. அதை அறிந்து ஏற்றுச் சீர்ப்படுத்த முயலாது, வயிற்றெரிச்சலுடன் சாபங்களை வழங்கினார். என்னவோ இவர் வாழ்வைக் கெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு பிறர் செயல்படுவதாக எண்ணி, வெட்கமில்லாமலும் சில நேரம் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டார். இவர் சாபங்கள் எதுவும் பலிக்கவில்லை என்பது புரிந்து இன்னும் கோபம் கொண்டார். கடவுள்களை ஏசத் தொடங்கினார். உறவு நட்பு தொழில்முறை என்று எங்கும் பகை வளர்ந்தது. ஒரு கட்டத்தில் தன் அம்மாவையே ஆத்திரத்தில் அடித்துவிட்டார். உடல் நலம் விரைவாகக் குன்றியது. இறுதியில் நிலை மிக மோசமாகி, மும்பையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, உளவியல் கோளாறுகளுக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய அம்மா "என் பையனுக்குப் பைத்தியம் பிடிக்குறாப்புல ஆயிடுச்சே!" என்று மிக வருந்தியது எனக்குத் துக்கமாக இருந்தது. இளமையில் நண்பரின் அம்மா என் பசி வேளைகளில் சோறூட்டியிருக்கிறார்.

சமீப இந்தியப் பயணத்தில் நண்பரைப் பார்த்துப் பேசினேன். பேச்சு வாக்கில் இந்தப் பதிவைப் பற்றிய உரையாடல் தொடங்கியது. விரும்பிப் படிப்பதாகச் சொன்னார். "ஏன் நிறுத்தி விட்டாய்?" என்றார்.

"இந்தப் பதிவை ஒரு புத்தகமாக உருக்கண்டு ஆதரிக்க முன்வந்து எழுதத்தூண்டிய இயக்கத்துக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்ததால், அவை நீங்கவும் அடங்கவும் காலம் தேவைப்படுகிறது" என்றேன்.

"ஒரு பிள்ளையார் சுழி போட்டு, தேங்காய் உடைத்தபின் எழுதத் தொடங்கியிருந்தால் இந்தத் தடைகள் வந்திருக்காது" என்றார் நண்பர்.

பலமாகச் சிரித்தேன். நண்பருக்குப் பிடிக்கவில்லை.

தன் சமீப வாழ்வைப் பற்றி மிகுந்த எரிச்சலோடு விளக்கத் தொடங்கினார். தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை சபித்தார். கடவுளையும் விடவில்லை. "இத்தனை செய்திருக்கிறேனே! அத்தனை செய்திருக்கிறேனே!" என்று கணக்கு சொல்லி கடவுளுக்கும் திட்டுக்களை வழங்கினார். "துரை.. நீ எத்தனை எழுதினாலும் ஒரு பயனுமில்லை. இந்தப் பதிவினால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் கிடையாது. நான் சொல்வதைக் கேள், இதெல்லாம் உருப்படாமல் போவதற்கான வழி, கால விரயம்.." என்ற பாணியில் பேசத் தொடங்கினார்.

"சரி.. சரி.. முதலில் உடல் நலம் தேறி வெளியே வா" என்று வாழ்த்தினேன். உடல் தேறினாலும் இவருடைய மனநலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று வருந்தி, நண்பருடன் பழகிய நல்ல தருணங்களின் இனிய நினைவுகளுடன் வெளியேறினேன். அனேகமாக இவரை இனி சந்திக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது.

நண்பரின் நடத்தையை வைத்துப் பொதுப்படுத்த இயலாதென்றாலும், கடவுள் மதம் சடங்குகளை ஒட்டிய நம்பிக்கைகள் பல நேரம் மனிதரின் கொடிய, துன்பமிகுந்த, ஆதறவற்றத் தருணங்களில் தாக்குவதோடு நில்லாமல், மனிதரின் மிக மோசமான நிழல் குணங்களையும் வெளிப்படுத்த வல்லவை என்பதை அனுபவத்தில் பலமுறை கண்டிருக்கிறேன். நிழல் குணங்களை வெளிப்படுத்தாதவர்களோ தன்னம்பிக்கை இழந்து, தன்வினை என்ற துக்கத்தில் மூழ்கி, மீண்டும் அதே நம்பிக்கைகளின் தோல்விப் போதையை நாடும் அபலைகளாகிறார்கள். இது ஒரு சுழல் என்று அறியாத மனங்கள், மூட நம்பிக்கைகளில் மூழ்கிச் சாகின்றன. மனம் பரிதாபமாகச் செத்தபின் உடல் பலமாக வாழ்ந்தென்ன பயன்?

    அமெரிக்க நாத்திக இயக்கத்துக்கு ஒரு சிறிய ஜே!

ப்லோரிடா மாவட்டத்தில் 'ஆண்டவரின் பத்து கட்டளை'களை ஒரு மிகப்பெரிய க்ரேனைட் கல்லில் செதுக்கி அரசாங்கத்துக்குச் சொந்தமான இடத்தில் நிறுவியிருந்தார்கள். பல வருடங்களாக இதை நீக்க முயற்சி செய்த நாத்திக இயக்கம் உயர்நீதிமன்ற வழக்கில், "அரசும் மதமும் வெவ்வேறு என்றக் கொள்கையை ஆதாரமாகக் கொண்ட அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் படி, அரசு நிலத்தில் ஆத்திகம் மற்றும் மதச்சார்பு அடையாளங்களை நிறுவுதல் தவறு; அப்படி நிறுவினால் நாத்திகத்துக்கும் சம உரிமை வழங்க வேண்டும்" என்று வாதாடி.. கடைசியில் தங்களுடைய அடையாளமாக ஒரு கல்லை நிறுவ அனுமதி பெற்றது.

நாத்திக இயக்கம் நிறுவியிருக்கும் அடையாளச் சின்னத்தில் அமெரிக்க அதிபர் ஜான் ஆடெம்ஸ் சொன்ன "கிறுஸ்தவ மத அடிப்படையில் உருவானதல்ல அமெரிக்க அரசு" என்ற வாசகத்தைப் பதித்திருக்கிறார்கள்.

வெற்றி என்றாலும் இது தோல்வியே. அதற்காகத்தான் சிறிய ஜே :)

'பத்து கட்டளைகள்' பதித்த சின்னத்தை நீக்கத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனருகே இன்னொரு சின்னத்தை நிறுவுவதால் பயனில்லை என்றும், நாத்திக இயக்கத்தின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இந்த வெற்றி எந்த விதத்திலும் உதவாது என்றும் நம்புகிறேன். நாத்திக இயக்கச் செயலரோ, "இது ஆத்திகர்களை உறுத்திக் கொண்டே இருக்கும். நாளடைவில் தங்கள் சின்னத்தை பெயர்த்தெடுத்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்வார்கள். இது வெற்றியின் முதல் படி" என்கிறார்.

பார்க்கலாம். எனினும் முதல் படிக்கு என் பாராட்டுக்கள்.

    இன்னொரு மாலை. இன்னொரு உரையாடல். என் பிள்ளைகளுடன்.

"டேடி.. என்னைப் படைச்சது நீ தானே?" என்றான் மகன். என் மகள் ஐபாடில் ஏதோ கேட்பது போல் பாசாங்கு செய்தபடி நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"ம்ம்.. ரைட்.. நானும் உன் அம்மாவும் சேர்ந்து படைத்தோம்.. என்ற விவரம் மட்டும் போதும் இப்போதைக்கு.." என்றேன்.

"பாட்டியும் தாத்தாவும் உன்னைப் படைச்சாங்க அப்படித்தானே?"

"ஆமாம்.."

"அவங்களை அவங்க அப்பா அம்மா.. அப்புறம் அவங்களோட அப்பா அம்மா.. அப்படித்தானே வரிசையாப் போகுது?"

"ஆமாம். என்ன சொல்ல வரே?"

"நம்ம நாய்க்குட்டி ரியோ அப்படித்தானே உருவாச்சு.. அப்புறம் அதோட அப்பா அம்மா.. அதோட அப்பா அம்மா என்று வரிசையா போவுது?"

"ஆமாம்"

"டேடி.. இந்த வீடு யார் கட்டினது?"

"கான்டிராக்டர்"

"உன்னோட கார்?"

"ஆடோ கம்பெனி ஆட்கள்"

"உன்னோட ஷர்ட் பேன்ட்?"

"மிசினோ மனுசனோ டாக்காவுலயும் திருப்பூர்லயும் உருவாக்கினது"

"நாம சாப்பிடுற இந்த சௌர்டோ ப்ரெட்?"

"பேகரியில உருவாக்கினாங்க.. ஏன் இதெல்லாம் கேட்குறே?"

"நாம, நம்ம நாய், நம்ம உணவு உடை வீடு.. அக்காவோட இந்த ஐபாட்.. எல்லாம் யாரோ உருவாக்கினதால தானே வந்துச்சு? அப்போ நாம இருக்குற இந்த உலகம் மட்டும், தன்னால் உருவாச்சுனு சொல்றதுல அர்த்தம் இருக்குதா டேடி?"

"நீதான் சொல்லேன்?"

"இந்த உலகம் காற்று ஒளி நட்சத்திரம் சூரியன் சந்திரன் எல்லாமே ஒரு நியதிப்படி நம்மைப் போலவே இயங்குறதால இதை மட்டும் யாருமே படைக்கவில்லைன்றது முரணா இருக்குதே டேடி? பாட்டி சொல்றது சரிதானோனு தோணுது.."

எனக்கு ஏதோ விளங்கத் தொடங்கியது. "என்ன சொனாங்க பாட்டி?"

"பாட்டி கூட சர்ச் போயிருந்தேனா.. சர்ச்ல ஒரு ஆள் சொன்னாரு.. பாட்டியும் அதான் சரின்னு சொன்னாங்க.."

"என்ன சொன்னாரு சர்ச் ஆளு?"

"திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரைக்கும் உழைச்சு கடவுள் உலகத்தை ஆறு நாளிலே உருவாக்கினதாவும், ஒரு நாள் ரெஸ்ட் எடுத்ததாகவும் சொன்னாரு. அதனால நாம எல்லாரும் கடவுள் நாளான ஞாயிற்றுக்கிழமையன்னிக்கு கடவுளைக் கும்பிடணும்னு சொன்னாரு.. எல்லாம் பைபில்ல இருக்குதாம்"

"அப்படியா? அதை நம்புறியா?"

"குழப்புது டேடி.. படைப்புகளின் ஒழுங்கை வைத்துப் பார்க்கும் பொழுது படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் ஒரு படைப்பாளி தேவைனு தோணுதே டேடி?"

"உலகையும் பறவை மிருகங்களையும் படைச்ச பிறகு யாவேங்கற அந்தக் கடவுள் புழுதியிலிருந்து முதல் ஆணை உருவாக்கினதாவும், அந்த ஆணின் உடம்பிலிருந்து பெண்ணை உருவாக்கினதாவும் சொல்லுது பைபில்.. அதுக்கு என்ன சொல்றே?"

"அது உருவகமா இருக்கலாம் டேட்.. ஒரு ஆணோட உடல் என்பது..." என்று தொடங்கிய என் மகளை அவசரமாக அடக்கினேன். "ஓகே.. இருக்கலாம்.. இதை உன் எட்டு வயது தம்பிக்கு விளக்க வேண்டியதில்லை.. உனக்கும் ஒண்ணும் தெரியாது"

"ஓகே.. நீ என்ன சொன்னாலும் சரி டேடி" என்றபடி ஐபாடைச் செருகிக் கொண்டாள்.

"அக்கா என்ன சொல்றா டேடி?"

"ஒண்ணுமில்லே"

"ஒண்ணுமில்லேனா பிறகு ஏன் அவளை அடக்கினே?"

மகனைப் பார்த்தேன். எட்டு வயது நிறையாத நிலையில் இவனுக்கு என்ன விளக்கம் சொல்வது? சொல்லாவிட்டால் சர்ச் ஆசாமியும் ஆத்திகப் பாட்டியும் சொல்வதை உண்மையென்று நம்பிவிடுவானே? தானாகவே இனி ஏதாவது அறிந்தாலோ அல்லது பேச்சு வாக்கில் நான் அதை மறுத்தாலோ குழம்புவானே? என் விளக்கம் அவன் குழப்பத்தைக் குறைக்குமா கூட்டுமா என்றக் குழப்பத்துடன் தொடங்கினேன். என் மகள் என்னை ஆவலுடன் பார்த்தாள். என் சங்கடம் அவளுக்குப் பிடித்திருந்தது.

"உலகத்து முக்கிய மதங்கள் எல்லாமே.." என்று தொடங்கினேன்.

"முக்கிய மதம்னா என்ன டேடி? முக்கியமில்லாத மதம்னு இருக்குதா?"

"நோ.. பிரபல மதம்னு மாத்திக்குவோம். ஹிந்து, கிறுத்தவம், இஸ்லாம், யூதம் இவையெல்லாம் பிரபல மதங்கள்.. நிறைய மக்கள் இந்த மதங்களை நம்புறாங்க.. இந்த மதங்கள் எல்லாமே ஒரு கடவுளை நம்பி உருவானவை"

"ஹிந்து மதத்தில் மட்டும் பத்தாயிரம் கடவுளுண்டு". சிரித்தாள் மகள்.

"ரைட்.. பிரபல மதங்கள் எல்லாமே உலகைப் படைத்தது கடவுள் என்றும், உலகை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அல்லது ஆறேழு நாட்களில் படைத்தார் என்றும் சொல்கின்றன.. சர்ச் ஆசாமி அதைத்தான் சொன்னார். பாட்டியும் அதையே நம்புகிறார்"

"எல்லா மதமும் அதைத்தான் சொல்லுதா? அப்ப அது உண்மையா டேடி?"

"எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. கேட்கிறயா.. உண்மையா இல்லையானு நீயே தீர்மானிச்சுக்கயேன்?"

"ஓகே"

"இந்து மதத்தில் தங்கக்கரு என்று ஒரு கான்செப்ட் உண்டு"

"தங்கக்கருவா? அப்படின்னா?"

"கரு என்றால்.. கரு என்றால்.. ஒன்று உருவாகும் இடம்.."

"அவனுக்குப் புரியாது" என்று கண்சிமிட்டினாள் பெண். "டேய்.. நீ பொறக்குறதுக்கு முன்னால எங்க இருந்தே தெரியும்ல? எங்கிருந்து பொறந்தே?"

"அம்மா வயித்திலருந்து"

"யெஸ்.. அதான் கரு.. புரியுதா?"

"ஓ.. அதானா? டேடி ஏன் இப்படி சொதப்புறாரு?" என்றான் மகன். "அக்காவாட்டம் சிம்பிளா சொல்லு டேடி.."

மகளை நன்றியுடனும் பொறாமையுடனும் பார்த்தபடி தொடர்ந்தேன். நான் சொல்வது சத்தியமாக இவனுக்குப் புரியப்போவதில்லை. "இந்து மதத்தில் தங்கக்கரு என்பது தலையாய சக்தியாகச் சொல்லப்படுகிறது. இந்த ஹிரண்யகர்ப்பம் அல்லது தங்கக்கருவை பிரம்மம் என்று வேதங்கள் சொல்கின்றன. இந்து மதத்தில் வாழ்க்கை நெறிகளையும் நியதிகளையும் உரைக்கும் உபநிஷது நூல்களும் பிரம்மத்தை ஒட்டியே தங்கள் கருத்தைச் சொல்கின்றன. தங்கக்கருவைத் தாங்கும் கடவுள்களாக சிவசக்தி, விராட் புருஷன் என்று பலவகை தெய்வங்கள் சொல்லப்பட்டாலும் பிரம்மா என்பவர் படைப்பாளியாக சொல்லப்படுகிறார்"

"ஓகே.. பிரம்மா எல்லாத்தையும் படைச்சாரா..?"

"இந்து மதத்துல பிரம்மா படைச்சாரு. இன்னும் கேளு, தமாஷா இருக்கும்". மகளின் இடைச்செருகல்.

"எனக்குத் தெரிந்தவரையில் பிரம்மா மனிதர்களை மட்டுமே படைச்சதா இந்து மத நூல்கள் சொல்லுது.. ஆனா ரிக் வேதத்தில் அனைத்து ஜீவன்களுக்கும் ஆதாரமான பிரம்மம்னு வருது.. அந்தப் பிரம்மம் சிவனைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது" என்றேன்.

"ஓகே.. பிரம்மா சிவன்.. யாரோ ஒருத்தர்.. ஆக மொத்தம் ஒரு படைப்பாளினு சொல்லுங்க.. எத்தனை நாள் எடுத்துக்கிட்டாரு? ஒன் வீக்?"

"இல்லை. உலகம் உண்டாகி வாழ்ந்து அழிவது எல்லாமே பிரம்மனின் ஒரு நாளில் நடப்பதாகச் சொல்கிறது இந்து மதம். பிரம்மனின் ஆயுளான நூறு நாட்களில் இப்படி உலகம் நூறு முறை உண்டாகி வளர்ந்து வாழ்ந்து அழிகிறது"

"ஜஸ்ட் ஒன் டே? அது எப்படி பாஸிபில் டேடி? எனக்கே நூறு நாளுக்கு மேலே வயசாகுதே?"

"குட்னஸ்.. திஸ் கிட் கேன் டூ மேத் டேட்!" என்ற மகளை முறைத்தேன். "இஸ்லாமும் கிறுத்துவமும் ஆறு நாள்னு சொல்லுது. அல்லா ஆறு நாள்ல உலகைப் படைச்சார்னு கொரான் சொல்லுது. யாவே ஆறு நாளில் உலகைப் படைச்சுட்டு, ஏழாவது நாள் ரெஸ்ட் எடுத்தார்னு பைபில் சொல்லுது.. யூதமும் அப்படித்தான்.."

"ஆறு நாள்.. ஒரு நாளை விட பெடர்னாலும் அது கூட இம்பாஸிபில் டேடி"

"சரி.."

"சரின்னா? அவ்ளோதானா? நீதானே உலகம் உருவாகி பிலியன் கணக்கான வருசங்களாச்சு.. சூரியன் இன்னும் அஞ்சு பிலியன் வருசம் எரியும் அது இதுனு கதை விட்டே? இப்ப எல்லாம் ஆறு நாளில் உருவாச்சு.. எல்லாம் சரின்றியே டேடி?"

'உலகமும் உலகைத் தாங்கும் அண்டமும் பிறந்த கதையை ஒவ்வொரு பிரபல மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது. மதங்கள் காலப்போக்கில் தங்கள் கதையை மாற்றிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவது வேறு கதை' என்பதை இவனுக்கு எளிமையாக எப்படி விளக்குவது? ஆத்திகனாக இல்லாமல் போனேனே என்று ஒரு கணம் தோன்றியது. ஆத்திகக் குடும்பமாக இருந்தால் சுலபமாக முடிந்திருக்கும். 'கடவுள் அற்புதமான சக்தி வாய்ந்தவர். அவர் சக்தியை விளக்க முடியாது. அப்படியே நம்ப வேண்டும். நம்பவில்லையென்றால் பாவம். நரகம் கிடைக்கும். கேள், ஒரு அழுக்குருண்டையை எறிந்து உலகைப் படைத்தார்; காது குண்டலத்தை எறிந்து அண்டத்தை உருவாக்கினார்; தொப்புள் கொடியிலிருந்து எல்லாவற்றையும் படைத்தார்' என்று எதையோ சொல்லி அவர்களைப் பிரமிக்க வைத்து நானும் பிரமித்து என் பங்குக்கு இன்னும் புரட்டியிருக்கலாம். என் பிள்ளைகளைச் சிந்திக்கச் சொன்னது தப்போ? எளிமையாகத் தப்பிக்கும் வழிகளைத் தொலைத்துவிட்டேனோ?

"என்ன டேடி.. பேச்சைக் காணோம்? உனக்கு எதுவும் தெரியாதா? இல்லை எல்லாமே அவங்க சொன்ன டயத்துல உருவாச்சா?"

"டைம் இஸ் ரெலெடிவ், டம்போ" என்றாள் பெண். 'எளிய ஐன்ஸ்டைன்' என்ற புத்தகத்தைப் பரிசளித்திருந்தேன். புத்தகம் படிக்கிறாள் என்பது தெம்பாக இருந்தது.

"ஹூ யு காலிங் டம்போ?" என்று சண்டைக்குப் போனான் மகன்.

"ஓகே.. ஓகே.." என்று மகனை சமாதானம் செய்தேன். "நாள் என்பது காலம் என்கிற கணக்கின் அளவு. நாம நாள்னு சொல்றது பூமியின் சுழற்சிக் கணக்கை அடிப்படையாக வைத்து உருவான அளவு என்பது உனக்குத் தெரியும் இல்லையா?"

"ஆமாம்"

"பூமியின் சுழற்சிக் கணக்கை நாமறிந்து சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன. அதிலும் சில நூறு ஆண்டுகளாக அவற்றைச் சரிபார்த்து பல திருத்தங்களை செய்து சமீப நூற்றாண்டுகளில் புரிந்து கொண்டிருக்கிறோம். அதனால் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவன் உலகை இத்தனை நாளில் இன்ன விதத்தில் படைத்தார் எனத் திட்டமாகக் கணிப்பது என்பதே கற்பனை கலந்ததாகும். கடவுள் உலகைப் படைத்தார் என்ற கற்பனையை ஏற்றாலும், எத்தனையோ காலத்துக்குப் பிறகு மனிதரைப் படைத்து, மனிதர்கள் கடவுளின் காலக் கணக்கைப் புரிந்து கொண்டு.. நான் சொல்வது புரிகிறதா?"

"கொஞ்சம் புரியுது.. ஆனால் எத்தனை நாளில் படைத்தாரென்று கடவுளே மனிதருக்குச் சொன்னதாகச் சொல்றாரே சர்ச் ஆளு?"

"பூமிச் சுழற்சியின் அடிப்படையில் உருவானது நம்முடைய நாள் கணக்கு.. இல்லையா? சூரியன் பூமியைச் சுற்றி வந்ததாகவே புராணங்களும் மதங்களும் சொல்லி வந்தன. சமீப அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வரை மனிதர்களும் அதையே நம்பினார்கள். அந்த நிலையில் கடவுள் எடுத்துக் கொண்ட நாள் கணக்கு, கடவுளே சொல்லியிருந்தாலும், பூமி நாள் கணக்கில் எப்படி உருவாகியிருக்க முடியும்?"

"டைம் இஸ் ரெலெடிவ் டேட்" என்றாள் பெண் மறுபடி.

"ரைட். ஒரு வேளை அது பூமிக்கணக்குப்படி மனிதர்கள் கற்பனை செய்த கடவுள் கணக்கென்று வைத்துக் கொள்வோம்"

"கடவுள் கணக்கா? அப்படின்னா?"

"பிரம்மனின் ஒரு நாளென்பது பூமிக் கணக்குப்படி நாலு பிலியன் வருடங்களென்கிறது இந்து மதம். அல்லாவின் ஒரு நிமிடம் என்பது பூமிக்கணக்குப்படி பத்தாயிரம் பிலியன் நிமிடங்கள் என்கிறது கொரான்.. பைபிலில் அப்படி எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை"

"அப்போ பைபில் கணக்கு பொய்யா?"

"பைபில் உருவான காலத்தில் 'யோம்' என்ற சொல்லை உபயோகித்தார்கள். காலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் 'யோம்'. இஸ்லாம், யூதம், கிறுத்துவம் எல்லாமே 'யோம்' என்ற சொல்லையே உபயோகித்தன. அந்த வகையில் பைபிலிலும் ஆறு நாட்கள் என்பது பதினாலு லட்சம் பிலியன் நிமிடங்களுக்கு மேற்பட்டதாகிறது.. இதையெல்லாம் பைபிலோ வேதமோ கொரானோ நேரிடையாகச் சொல்லவில்லை.. நாள் நேரக் கணக்கெல்லாம் மதநூல் அறிஞர்களின் கருத்து"

"அப்போ மதங்களுக்குள்ளேயே காலக் கணக்கு ஒத்து வரவில்லையா?"

"நீ தான் சொல்லணும்"

"அப்படியே ஒத்து வந்தாலும் இந்துவின் பிரம்மா உலகைப் படைத்தாரா, இஸ்லாத்தின் அல்லா படைத்தாரா, யூத கிறுத்துவரின் யாவே படைத்தாரா?"

"நீ தான் சொல்லணும்"

"என்ன டேடி இது.. கடைசியிலே எங்கிட்டயே திருப்புறே?"

"நிறைய விவரம் சொல்லியிருக்கேன்.. புத்தகங்கள் படிச்சிருக்கே.. நீ தான் சொல்லேன்?"

மகன் சிந்தித்தான். "ம்ம்.. இந்தக் கணக்கெல்லாம் டூ மச். டைனொசார் செத்து அறுவத்தஞ்சு மிலியன் வருசமாச்சு.. சர்ச் ஆள் கணக்குப்படி ஆறு நாளுக்குள்ள கடவுள் மனுசனைப் படைச்சாருன்னா, ஆறு நாளுக்குள் அறுவத்தஞ்சு மிலியன் வருசம் அடங்குது.. தட் மேக்ஸ் நோ சென்ஸ்.. சாத்தியமேயில்லை. தேவையில்லாத குழப்பம் டேடி". மிகச் சுலபமாக டைனொசார் காலக் கணிதத்தில் விடை தேடினான்.

மகள் சிரித்தாள். "டேடி.. நீ இதை சுலபமாகக் கையாண்டிருக்கலாம். கடவுள் உலகைப் படைக்கவில்லை. உலகை யாரும் படைக்கவில்லை என்று நீ நம்புவதாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?"

சொல்லியிருக்கலாம் தான். மகனுக்கு சிந்திக்க நேரமும் வாய்ப்பும் தராமல் ஆத்திக வழியில் நடந்திருக்கலாம் தான். என் கருத்தை என் நம்பிக்கையை மகன் மனதுள் திணித்திருக்கலாம் தான்.

► தொடர்க          

இதற்கு முன்

1   2   3   4

11 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுதுங்கள் தரமான பதிவை மீண்டும் தாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. கடவுள் உலகைப் படைக்கவில்லை....

    உங்களின் பகிர்வுகளே வித்தியாசம்...

    பதிலளிநீக்கு

  3. எதேச்சையாகத் தமிழ்மணம் மூலம் இப்பதிவினைக் கண்டேன்.குழப்பங்களிருந்துதான் தெளிவு பிறக்க வேண்டும். நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் குழந்தைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுதுக் குழப்பநினைக்காதீர்கள். உங்கள் சிந்தனைகள் யாராவது சொல்லிக் கொடுத்து வந்ததா.? JUST TELL THEM TO ASK QUESTIONS AND TRY TO FIND THEIR OWN ANSWERS.TRY TO TELL THEM WHAT IS GOOD AND WHAT IS BAD. NEED NOT BRING IN GOD. TEACH THEM IF POSSIBLE THE CONCEPT OF LOVE. REGARDS.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ஸ்ஸ் ...ஸப்பா ...! தெரியாத ஒண்ணை தெளியவைக்க எல்லா மதத்திலும் குழப்பம் தான்!

    பதிலளிநீக்கு
  5. GOD IS BAD ஜிஎம்பி சார். நான் அதைச் சொல்லியேயாக வேண்டும். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவர்கள் இஷ்டம். என் பிள்ளைகளுக்கு நான் சொல்லித்தராமல் சர்ச் ஆசாமியும் காவி மடாதிபதியுமா சொல்லித்தர அனுமதிப்பது?

    பதிலளிநீக்கு
  6. நன்றி அப்பாதுரை அவர்களே! கிட்டத்தட்டை ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொடருகிறீர்கள் ! இந்த தொடரை ஆத்திகர்கள் அதிகமாகபடிக்கிறார்களோ என்றே தோன்றுகிறது ! அது தான் பின்னூட்டங்களில் தெரிகிறது ! நல்ல வளர்ச்சி ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  7. வருக காஸ்யபன் ஐயா.
    இருதரப்பிலும் பதிவை அதிகம் பேர் படிப்பதில்லை - இப்போதைக்கு சற்று அடங்கிய வாசிப்பாகவே இருக்கிறது. அதனால் என்ன, பரவாயில்லை. பொறுமையைச் சோதிக்கும் நீளமான பதிவும், நாத்திகக் கருத்தும் போதாக் குறைக்கு நீண்ட இடைவெளிகளும் கூட காரணமாக இருக்கலாம்.
    பரந்த வாசிப்பை உடனடியாக எதிர்பார்க்கவும் இல்லை :) இந்தப் பதிவைத் தமிழ் விரும்பும் பனிரெண்டிலிருந்து இருபது வயதுக்குட்பட்டவர்கள் படித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.. அவர்களைச் சென்றடையும் வழி தெரியாமல் திகைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. என் மகளுக்கும் மகனுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறேன்.

    //இந்தப் பதிவைத் தமிழ் விரும்பும் பனிரெண்டிலிருந்து இருபது வயதுக்குட்பட்டவர்கள் படித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.. அவர்களைச் சென்றடையும் வழி தெரியாமல் திகைக்கிறேன்.//

    அவர்களிடம் கேட்டால் இதற்கொரு வழி சொல்வார்களாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. நெகிழ்ந்து போனேன் நிலாமகள்! நன்றி. (பொறுப்போடு எழுத வேண்டுமே இனி?!)

    என் மகள் பள்ளிக்கூடத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றி அங்கு வந்திருந்த சில பதின்மப் பிள்ளைகளிடம் இதைப் பற்றிக் கேட்டேன். "மனிதர்களைப் பற்றிக் கவலைப்படவே எங்களுக்கு நேரமில்லை.. கடவுள் நாத்திகப் புலம்பலெல்லாம் ஸோ ட்வென்டியத் செஞ்சுரி" என்றார்கள்.

    பதிலளிநீக்கு
  10. /GOD IS BAD/ இல்லாத ஒன்று எப்படி மோசமானதாகும். ஒன்று இருக்கிறது என்ற பின்தானே அது நல்லதா கெட்டதா என்று சொல்லமுடியும்.?நன்றாகச் சொல்லிக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தைத் திணிக்காதீர்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. ஹிஹி ஜிஎம்பி சார்.. கேள்வியைச் சுளுவா கேட்டுட்டீங்க.. நான் கண்ணாடியைப் பிடிச்சுட்டு நிக்குறேன்.
    இல்லாத ஒன்றைத்தானே நல்லது நல்ல வழக்கம் உன்னதமானதுனு எல்லாரும் சொல்றாங்க? அது நல்லதா கெட்டதானு எப்படி சொல்லமுடியும்னு அவங்களைக் கேக்குறீங்களா? இல்லையே? அதனால தான் GOD IS BADனு சொல்ல வேண்டியிருக்கு.

    எதையும் யார் மீதும் திணிக்கும் எண்ணமோ வழக்கமோ இல்லை. அப்படித் திணிப்பதாக இருந்தால் என் பிள்ளைகள் மனதில் எவனோ காவி வெள்ளைப் போலிகளோ அல்லது பெரியவர்கள் என்ற அந்தஸ்தில் குளிர் காயும் கண்மூடிகளோ தங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் கண் குத்தும் பாணி எண்ணைங்களை விட, என் எண்ணத்தைத் திணிப்பது மேல் என்று நினைக்கிறேன்.

    கொஞ்சம் யோசியுங்க. 'உங்கள் எண்ணத்தைத் திணிக்காதீர்கள்' என்று நீங்கள் சொல்வதே உங்கள் எண்ணத்தைத் திணிப்பது போலத்தானே? நன்றாகச் சொல்லிக்கொடுப்பதும் எண்ணத்தைத் திணிப்பது தானே? சாமி அரோகரா ராமனாம வரானனம்னா அது நல்லதுனு நினைச்சுக்குறோம், அவ்வளவு தான்.

    போகட்டும் விடுங்க. இதைத்தான் ஆத்திகம் என்ற பெயரில் நாம் எல்லாருமே செய்து வந்திருக்கிறோம்/வருகிறோம். பெற்றவர்களும் பெரியவர்களும் திணித்தது தானே கடவுள் நம்பிக்கையும் கண்மூடித்தனமும்? இல்லையெனில் எங்கிருந்து வந்தது? உங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு கடவுள் நம்பிக்கை திணிக்கப்பட்டுத் தான் வந்தது. என் முயற்சியினால் தான் வெளியேறியது.

    நாத்திகத்தைத் திணிக்க முடியாது. நாத்திகம் என்பது அறிவின் எழுச்சி. அவரவர் தத்தம் முயற்சியில் பெறும் தெளிவாகும். ஆனால் பழுத்த ஆத்திகத் திணிப்பின் சுமை பலரின் அறிவெழுச்சியை அடக்கி விடுகிறது. அதனால் தான் இல்லாத ஆண்டவருக்கு அடிமைகளாகிறோம்.

    பதிலளிநீக்கு